நமது நாடு நம்பமுடியாத பல அதிசயங்ளையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டது. பல்வேறு பாரம்பரியங்களையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. எப்போது நம்பிக்கை கண்மூடித்தனமாக மாறுகிறதோ அப்போது இந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகளாக கருதப்படுகின்றன. நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த வாரம் பசுமாடுகளை அடிப்படையாகக் கொண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொண்டாடப்படும் ஜபுவா என்று பொதுவாக அழைக்கப்படும் காய் கெளரி விழாவைக் காணலாம்.நமது நாட்டில் பசு மாட்டினை அன்னைக்கு சமமாக மதிப்பது வழக்கம். இன்னமும் பல கிராமங்களில் பசு மாடுதான் பல குடும்பங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளது. இதுபோன்ற கிராம மக்கள் காய் கெளரி பண்டிகை அன்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் பசுவை தாயாக அல்லது தெய்வமாக மதித்து பூஜைகள் செய்கின்றனர். இந்த பண்டிகை தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கிராமத்தினர் தங்களது பசுக்களை நன்கு குளிப்பாட்டி அவற்றை மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கின்றனர். பின்னர் அங்குள்ள கோவர்தன் கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்கின்றனர்.
பூஜைகள் செய்தபின்னர் தங்களது பசுக்கள், அதன் கன்றுகளுடன் கோயிலை 5 முறை வலம்வருகின்றனர்.
இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் பசுக்களும், கன்றும் கோயிலை சுற்றி வரும் பாதையில் மக்கள் விழுந்து பசுக்களை வணங்கியபடி படுத்துக் கொள்கின்றனர். பசுக்களும் கன்றுகளும் அவர்களின் உடலை மிதித்துக் கொண்டே செல்கின்றன. அப்போது பசுக்களை நோக்கி கோமாதா என்று அவர்கள் கோஷமெழுப்புகின்றனர்.
கிராம மக்கள் தங்களை காப்பாற்றும் பசுவிற்கு பூஜை செய்வதை மிகுந்த மகிழ்ச்சியுடனும், குதூகலத்துடனும் செய்கின்றனர். ஆனால் கோமாதாவை வணங்குவதில் இப்படி ஒரு அணுகுமுறையை பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் எந்த பயமும், வெறுப்பும் இன்றி கடைபிடித்து வருகின்றனர். மேலும், அன்றைய தினம் முழுவதும் அவர்கள் உண்ணா நோன்பும் கடைபிடிக்கின்றனர்.
இது நிகழ்ச்சியில் பல பக்தர்கள் காயமடைகின்றனர். காயமடைந்தால் கூட அவர்கள் அங்கேயேதான் படுத்துக் கிடக்கின்றனர். அவர்களது பக்தியிலோ, செயலிலோ எந்த மாற்றமும் இல்லை. இந்த நிகழ்ச்சி பற்றி கோவர்தன் கோயிலின் பூசாரியிடம் கேட்டதற்கு, இதுபோன்று பசுவின் காலில் மிதிபடும் பக்தர்களுக்கு வாழ்நாளில் எந்த கஷ்டமும் பிரச்சினைகளும் ஏற்படாது என்று கூறுகிறார்.இந்த வழிபாட்டில் கிராமத்தினர் மிகுந்த நம்பிக்கைக்கை கொண்டுள்ளனர். பசுக்களின் பாதங்கள் தங்கள் மீது படும்போது அவர்களின் சொந்த தாயின் பாதங்கள் படுவதாவே அவர்கள் கருதுகின்றனர். பசுக்களின் ஆசி கிட்டுவதற்காக அவர்கள் எந்தவிதமான வலியையும் தாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர். அதே சமயம், இந்த நிகழ்ச்சி பல சமயங்களில் பயங்கரமானதாக ஆகி விடுகிறது. விளையாட்டுக்காக சிலர் தங்களது காளை மாடுகளையும் கோயிலை சுற்றி வர செய்கின்றனர், சிலர் கன்றுகளின் வாலில் பட்டாசுகளை கொளுத்தி விடுகின்றனர். பசுவின் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்கள் சிலர் குடித்து விட்டு வருவதும்
அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டாலும், கிராம மக்களின் கண்மூடித்தனமான இந்த நம்பிக்கைக்கு எதிராக இவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்களாக ஆகிவிடுகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.... பக்தர்கள் பசுக்களிடம் இருந்து ஆசி பெறுகிறார்களா அல்லது இது வெறும் மூட நம்பிக்கைத்தானா? எங்களுக்கு எழுதுங்கள்.