ஓரினச் சேர்க்கைக்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா?

சனி, 7 பிப்ரவரி 2009 (17:03 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

பழமையான பல ஜோதிட நூல்களில் ஓரினச் சேர்க்கை, அலித் தன்மை குறித்து மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது ஓரினச் சேர்க்கை பல காலமாக தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது தெ‌ரி‌யவ‌ருகிறது.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதன், சனியும் அலி கிரகங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த 2 கிரகங்களும் ஒரே வீட்டில் வலுவாக அமர்ந்து அவற்றை குரு/வளர்பிறைச் சந்திரன் பார்க்காமல் இருந்தால் அவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆட்படுவர்.
ஜோதிட ரீதியாக லக்னத்திற்கு 3வது இடம் போகஸ்தானமாக கொள்ளப்படுகிறது. அந்த வகையில் லக்னத்திற்கு 3க்கு உரியவன் அல்லது ராசிக்கு 3க்கு உரியவன் அல்லது இவர்கள் இருவருமே கெட்டுப் போய் இருந்து, அவருக்கு சனியும், புதனும் ஒரே வீட்டில் இருந்து அதனை சுபகிரகங்கள் பார்க்காமல் விட்டுவிட்டால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாகவே அல்லது அலித்தன்மை உடையவர்களாக இருப்பர் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

என்னிடம் வரும் ஜாதகங்கள் மேற்கூறிய அமைப்பை உடையவர்களுடைய ஜாதகங்களை ஆய்வு நோக்கில் சேகரித்து வைத்துள்ளேன். அந்த வகையில் சிலருக்கு போகஸ்தானம் நன்றாக இருந்தாலும், மோசமான தசை வரும் போது ஓரினச் சேர்க்கையை தூண்டிச் செல்லும். எனினும் நல்ல தசை திரும்பும் போது அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வழி பிறக்கும்.

ஆனால் சிலருக்கு இறுதி வரை நல்ல தசை (போகஸ்தான வகையில்) இல்லாமலே போய்விடுவதும் உண்டு. இதன் காரணமாக அவர்களால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் போய் விடுகிறது.

இதேபோல் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகி (ரொம்ப பலவீனமாக) இருந்து சனி, கேது ஆகியவற்றுடன் ஒரே வீட்டில் சேர்ந்திருக்கும் போது, செவ்வாய் பலமிழந்து இந்த மூன்று கிரகக் கூட்டணியைப் பார்த்தால் அவர்களும் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பர்.

அதே வேளையில் மேற்கூறிய கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும், அவர்களுக்கு மோசமான தசை (போகஸ்தான வகையில்) ஆயுள் முழுவதும் வராமல் இருக்கும் ஜாதகங்களும் உண்டு. அவர்களுக்கு உள்ளூர ஓரினச் சேர்க்கைக்கான ஆசை இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இறுதி வரை கிடைக்காமலேயே போய்விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்