குருசந்திர யோகம் என்றால் என்ன? அதன் பலன்களை விளக்கிக் கூறுங்கள்?

சனி, 31 ஜனவரி 2009 (15:50 IST)
குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும். குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை) இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.

இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள், சத்தியமதவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்களஉடையவர்களாக இருப்பர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.

சந்திரன் ஆட்சி பெறுவதாலும், குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதே குருசந்திர யோகம் மீனத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். ரிஷபத்தில் குருசந்திர யோகம் இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.

பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

சந்திரன் மனோகாரகன். அவர்தான் உடலுக்கு உரியவர். இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம் பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும். எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும் அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும், தேக பலமும் கிடைக்கும்.

மனைவி, குழந்தைகள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.

ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும். உதாரணமாக ஒரு சில விடயங்களில் மற்றவர்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்பது போல் இருப்பர்.

விருச்சிகத்தில் குருசந்திர யோகம் காணப்பட்டால் தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும். தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.

சரியாகக் கூறவேண்டுமென்றால் மேம்பட்ட நிலைக்கும், தாழ்வு மனைப்பான்மைக்கும் இடையே சிக்கித் தவிப்பர்.

இதுமட்டுமின்றி, குருவும், சந்திரனும் எந்தப் பாகையில் இணைகின்றது. எவ்வளவு பாகை (டிகிரி) வித்தியாசப்படுகிறது என்பதைப் பொறுத்தும் யோகப் பலன்கள் மாறுபடும். எனவே, குரு-சந்திரன் சேர்ந்துவிட்டாலே அது ராஜயோகம் என்று கூறிவிட முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்