பிரதமை திதியை பாட்டியம் என்று சொல்வார்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பெளர்ணமி முழு மதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி.
பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்.
கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள்.
போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.
நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் அமாவாசையைத் தாண்டுவார்களா என்று எதை வைத்துக் கூறுகின்றனர்?
அமாவாசையை நாம் அறிவியல் பூர்வமாகவே பார்க்கலாம். ஆத்ம காரகன் சூரியன். ஆத்மா என்பது உயிர். உடலுக்குரியவன் சந்திரன். சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும்.
அதனால்தான் அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோ காரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசெளகரியம் உண்டாகும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும்.
அதனால்தான் அமாவாசையை தாண்டுமா என்று சொல்கிறார்கள். சில நேரங்களில் அமாவாசை எல்லாம் தாண்டி கடைசி நேரத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துவிடும்.