இந்த தர்மத்தை எடுத்துக் கொண்டால் புல் - பூண்டு, புழு, பூச்சி, தாவரங்கள், செடி - கொடிகள், பறவை, விலங்கினங்கள் அனைத்தையும் இறைவனோடு தொடர்பு படுத்தித்தான் பார்க்கிறோம். திருவானைக்காவல் திருத்தலம் சென்று பார்த்தால் சிவனை சிலந்தி வழிபட்ட தலம், நண்டானூரில் நண்டு சிவனை வழிபட்ட இடம் என்று பெயர்பெற்றுள்ளது. மயிலாடுதுறை அருகே திருப்பாம்புரம் என்ற ஊரில் பாம்பு சிவனை வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.
தேவர்கள் எல்லாம் தவம் இருந்தார்கள். சிலர் தங்களது தவத்தில் குறைபாடு இருந்ததால் சபிக்கப்பட்டு மரங்களாகவும், விலங்குகளாகவும் பிறந்ததாகவும், இறைவன் அவதாரம் எடுத்து அவர்களுக்கு முக்தி கொடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இதுபோல் வாழைக்கு தாலி கட்டுவது என்று சொல்லப்படுகிறது. சேர நாடு என்ற கேரள நாட்டை எடுத்துக் கொண்டால் கேரளாவில் உள்ள ஆன்மீக நூல்களில் வாழை மரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தமிழகத்தில் அரச மரத்திற்கும், வேம்புவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கேரளாவில் வாழையை கதளி என்கிறார்கள். வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு.
‘ஒரு பிள்ளை பெற்றால் உடனே செத்தாள் அந்த உத்தமி யார்’ என்று வாழையைக் கூறுவார்கள். வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது.
அதனால்தான் வாழைக்கு தாலி கட்டினால் களத்திர தோஷம் மற்றும் தார தோஷம் ஆகியவை நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
வாழையை பெண்ணாக எண்ணி, வாழைக்கு தாலி கட்டினால் ஒரு மனித பெண்ணைத் திருமணம் செய்யும்போது அதில் மண முறிவு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஒரு சிலருக்கு ஜாதகத்தில் இரண்டு திருமணம் இருக்கும். இவர்களுக்கு இதுபோன்று செய்வது சிறந்தது.
அதாவது ஒருவருக்கு 8ம், 9ம் துணைவிக்கான ஸ்தானம். இந்த இடங்களில் பாவ கிரகங்கள் உட்கார்ந்திருந்தாலோ, சுக்கிரனை பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலோ அவர்களுக்கு தார தோஷ ஜாதகம் என்று கூறுகிறோம். தார தோஷம் என்றால் இவர்களுக்கு இரண்டாவது மனைவி உண்டு. அவர்கள் வாழைக்கு தாலி கட்டி வெட்டிவிட்டு, பிறகு திருமணம் செய்து கொண்டால் இரண்டாவது திருமணம் என்ற கணக்கு வந்துவிடும்.
கழுதைக்கு தாலி கட்டுவது
தேவலோகத்தில் எல்லாம் கழுதை தேவரின் வடிவம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் கழுதைக்கு தாலி கட்டினால் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.
வேம்பு, அரசு சேர்த்து வைத்தாலும் மழை பெய்யும் என்று சொல்வார்கள். அதாவது அரச மரம் என்பது சிவனையும், வேம்பு அம்பாளையும் குறிக்கும்.
மேலும் அரச மரத்திற்கு அறிவியல் பூர்வமாக பார்த்தால் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதாவது அரச மரத்தின் காற்றிற்கு ஆண்களின் விந்தணுவை பெருக்கும் குணமும், விந்தணுவின் நீர்த்த தன்மையை நீக்கும் குணமும் உண்டு.
வேப்ப மரத்தில் இருந்து வரும் காற்றும் உடலுக்கு நல்லது. அதேபோல் மாமரத்தின் காற்றும் நல்லது.
அரச மரத்தையும், வேம்புவையும் ஒன்றாக நட்டு வைத்து அதற்கு தாலி கட்டினாலும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்குக் காரணம் சில மரங்களுக்கு சில சக்திகள் உண்டு.
வேறு சில அர்த்தங்களும் உண்டு. அதாவது வேப்ப மரமும், அரச மரமும் இருக்கும் இடத்திற்குச் சென்று தாலி கட்ட தார தோஷம் நீங்கும் என்று சொல்லும்போது, அதனை செய்வதால் ஆணின் மனதை திருமணத்திற்கு தயார் படுத்துகிறோம். அங்கு தாலி கட்டியதும் அவரது மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும். மனோகாரகன் வலுவடைகிறான்.
அனைத்து பரிகாரங்களும் மனிதனின் மனதை திருப்திப்படுத்துவதற்காகத்தான் செய்யப்படுகின்றன. மனது வலுவடைந்தாலே அவனது காரியங்கள் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை.