சூரியனும் சனியும் பகைக் கோள்களாக சொல்லப்படுவது ஏன்?

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (16:44 IST)
சூரியப் புத்திரன் சனி. ஆனால் ஜோதிடத்தின்படி சூரியனும், சனியும் பகைக்கோள்கள் என்று ஏன் சொல்லப்படுகிறது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

ஜாதகப்படி பார்த்தால் சூரியனும், சனியும் பகைக்கோள்கள்தான். புராணப்படி பார்த்தாலும் அவை பகைக்கோள்கள்தான். சூரிய பகவான் வெண்மை கலந்த செந்நிறமாக இருப்பார். சனி பகவான் கரு நீலம். நிறத்தில் கூட ஒற்றுமை இல்லை. மாறுபட்டுப் பிறந்ததால் பகை உண்டானதாகச் சொல்லப்படுகிறது.

அறிவியில் பூர்வமாகப் பார்க்கும்போது சூரியன் முழுக்க முழுக்க ஹீலியம் வாயு நிறைந்தது. வெப்ப அணுக்கரு உலைகள் கோடிக்கணக்கில் நிறைந்தது. ஆனால் சனியோ கார்பன், கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், ஈத்தேன் கனிமங்கள், வாயுக்களால் நிறைந்தது. சனிக்கும் வெப்பத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை. சனி ஒரு பனிக்கோளாகும். குளிர்ச்சியானது.

இதை வைத்து இயல்பாகப் பார்த்தால் சனியும், சூரியனும் வேறுபட்டுத்தான் உள்ளன. அதனால் பகைக் கோள்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு ஜாதகருக்கு சூரியனும், சனியும் ஒரே வீட்டில் அமர்ந்தால் அவருக்கு இதயக் கோளாறு ஏற்படும். ரத்தத்தில் பெரிய பாதிப்பு, நரம்புக் கோளாறு, படபடப்பு ஏற்படுவது, எரிஞ்சு விழுவது போன்றவை ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்