சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.
சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி
பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.
செவ்வாய் : சுப்ரமண்யர்
ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.
புதன் : விஷ்ணு
ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.
குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)
ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.
சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்
ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.
சனி : எமன், சாஸ்தா
உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).
ராகு: காளி, துர்கை
கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.
கேது : விநாயகர், சண்டிகேஸ்வரர்
ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).