ராகு காலம், எமகண்டம் என்பது என்ன?

வியாழன், 31 ஜனவரி 2008 (17:25 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

ஜோதிடப்படி அவருடைய மகன் இவர், இவருடைய மகன் இவர் என்று சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி சரியாகக் கூறுவதில்லை. இங்குள்ள ஆய்வாளர்களிடமும் அதற்கு சரியான பதிலில்லை.

ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த காலங்களில் அவர்களது பணி சிறப்பாக இருக்காது என்பதை கண்டறிந்து அவ்வாறு செய்துள்ளனர்.

அதுபோல ராகுகாலம், எமகண்டத்திலும் பணியாளர்களின் நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அந்த சமயங்களில் தான் வாக்குவாதம் வருவது, பிரச்சினைகள் பெரிதாவது என்று நேரிடுகிறது.

இதை வைத்துப் பார்க்கும்போது ராகுகாலம், எமகண்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரம். அதாவது திங்கட்கிழமை என்றால் ஆறு ஏழரை ராகு காலம் என்று கணித்து வைத்திருக்கிறார்கள்.

விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாக பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள்.

மருத்துவர் செரியன் என்பவர் ராகு காலம், எமகண்டங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்வதில்லை. மேலும் அந்த சமயங்களில் அவர் எதையும் பேசாமல் மெளனமாக இருந்துவிடுவாராம்.

அவர் ராகு காலம், எமகண்டங்களில் செய்த சில அறுவை சிகிச்சைகள் தோல்வி அடைந்ததை அவரே கண்காணித்து அந்த முடிவினை எடுத்துள்ளார். இத்தனைக்கும் அவர் கிறிஸ்துவர்தான்.

ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

வாகனத்தை இயக்கும்போது கூட, ராகு கால, எமகண்ட நேரங்களில் அசுரத் தனமாக வண்டியை இயக்குவோம். சந்து பொந்துக்கு செல்வது போன்றவை நேரிடும். கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தூண்டும் நேரங்கள் அவை. அதனால் தான் அந்த நேரங்களில் பொறுமையாக செய்வது நல்லது, அமைதியாக இருப்பது நல்லது என்று கூறுவார்கள்.

வழக்கமான பணிகளை நாம் அந்த நேரங்களில் தொடரலாம். ஆனால் எந்த புதிய வேலையையும் அந்த நேரத்தில் துவக்குவது நல்லதல்ல. ஒரு நடிகர் தனது பட பூஜையை ராகு காலத்தில் துவக்கி, பூனையை குறுக்கே போக விட்டு, விதவைப் பெண்ணை குத்துவிளக்கேற்றச் சொல்லி எல்லாம் செய்தார்.

ஆனால் அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் பல்வேறு பிரச்சினைகள், வழக்குகள் என பலவற்றை அவர் சந்தித்தார்.

ஒவ்வொன்றும் அதற்கான பலனை நிச்சயம் அளிக்கும்.

ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை?

ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்