2014 புத்தாண்டு பொதுப்பலன்!

செவ்வாய், 31 டிசம்பர் 2013 (17:23 IST)
FILE
புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு மணி 12, 00க்கு 1, 1, 2014-ம் ஆண்டு பிறக்கிறது.

இந்த புத்தாண்டிற்கான பொதுப்பலனை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

எண் ஜோதிடப்படி ஆன்மிகம், பகுத்தறிவுக்குரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் (2+0+1+4=7) இந்தாண்டு பிறப்பதால் மக்கள் எதிலும் மாற்றத்தை விரும்புவார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க துணிவார்கள். ஆன்மிகத்தின் ஆழத்தையும் எளிதாக உணர்வார்கள். மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும்.

கெஜகேசரி யோகத்தில் இந்தாண்டு பிறப்பதால் கல்வித்துறை மேம்படும். போலி கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்படும். புதிய பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மதிப்பெண் முறைகள் நடைமுறைக்கு வரும். ஆசிரியர்களுக்கு சம்பளம் உயரும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்த புது சட்டங்கள் அமலுக்கு வரும்.

மருத்துவம், ஆடிட்டிங், சட்டம், மெக்கானிக் ரோபோ எஞ்சினியரிங் படிப்புகள் பிரபலமடையும். அறிவியலறிஞர்கள் உருவாகுவார்கள். இந்தியா அதிநவீன ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் ஏவும்.

குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைந்திருப்பதால் நாகரீகமற்ற வகையில் அரசியல்வாதிகளின் அணுகுமுறை இருக்கும். மக்களிடம் சேமிப்பு குறையும். தங்கம் விலை அதிகமாகும். இந்தியாவின் தங்கப் பயன்பாட்டு சதவிகிதம் வருடத்தின் முற்பகுதியில் குறைந்து பிற்பகுதியில் கூடுதலாகும். வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகைய செலுத்த முடியாமல் பலரும் சிரமத்திற்குள்ளாவார்கள். வங்கிகளின் வட்டி விகிதம் உயரும்.

பாலியல் குற்றங்கள், பலாத்காரங்கள் குறையும். ஆனால் பெண் ஆதிக்க கிரகமான சுக்ரன் வக்கரித்து நிற்பதால் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகமாகும். இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வோரின் எண்ணிக்கை கூடும். சாலை விபத்துகளாலும், மன உளைச்சலாலும் உயிரிழப்பு அதிகரிக்கும்.

உலகெங்கும் இயற்கை சீற்றங்களும், ஆட்சி கவிழ்ப்புகளும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளும் பெருகும். பல தொழிற்கூடங்கள் மூடப்படும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வாகனங்களின் விலை விழும். ஆனால் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிலையற்றதாகி உயரும். முறையற்ற உறவு முறை அதிகரிக்கும். சுமங்கலிப் பெண் பாதிப்படைவார்கள்.

21.6.2014 வரை கலைகளுக்குரிய கிரகம் சுக்ரனின் வீட்டில் சனியும், ராகுவும் தொடர்வதாலும் 18.10.14 முதல் 15.12.14 வரை சுக்ரன் பலவீனமாவதாலும் புகழ்பெற்ற சினமாக் கலைஞர்கள் பாதிப்படைவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் சிரமப்படுவார்கள். சில திரைப்படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

வீடுகளின் விற்பனைக் குறையும். கட்டிட விபத்துகள் அதிகரிக்கும். பசு மாடுகள் புதுவித நோயால் பாதிப்படையும். ஆடு மற்றும் நாய்களும் வைரசால் பாதிப்படையும். அறுவடைக் காலத்தில் மழை அதிகரிக்கும்.

வருட தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செவ்வாய் பலவீனமடைவதால் ரியல் எஸ்டேட் விழும். ஆனால் செவ்வாய் 2, 9, 2014 முதல் வலுவடைவதால் அதுமுதல் பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். ஐசான் வால் நட்சத்திர இயக்கத்தால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசியலில் திடீர் திருப்பங்களும், மாறுபட்ட கூட்டணியும் அமையும். இந்தியா அண்டை நாடுகளுடன் மறைமுக யுத்தத்தை சந்திக்க வேண்டி வரும். ஆட்சியாளர்கள் நிம்மதியிழப்பார்கள்.

பரிகாரம்:

நியாயத்திற்கும், நேர்மைக்கும், பக்தி மார்க்கத்திற்குரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் இந்தாண்டு பிறப்பதால் அழியும் நிலையிலுள்ள, ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை புதுப்பிக்க உதவுங்கள். தவறான வழியில் வரும் சொத்து, சுகங்களை தவிர்க்கப் பாருங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்