2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : ரிஷபம்!

செவ்வாய், 31 டிசம்பர் 2013 (16:17 IST)
FILE
செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு எட்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆனால் உங்களுக்கு 6-ம் வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டுப் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். ராகுவும் ஜீன் 20-ந் தேதி வரை 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.

சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்து சேரும். தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருக்கு இருந்த நோய் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி வந்துப் போகும்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உணவு, பைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்தும் தருவார்கள். என்றாலும் பணிகளை முடிப்பதில் தொய்வு வேண்டாம். சக ஊழியர்களும் மதிப்பார்கள். பதவி உயர்விற்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சம்பளம் உயரும்.

கன்னிப்பெண்களே! சமயோஜித புத்தி அதிகரிக்கும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள்.
மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள கீரை காய்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த 2014-ம் ஆண்டு உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

சென்னை மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்