எதிரிக்கும் உதவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பொருள் வரவு, உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு, பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியத்தையும் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. ஆடம்பரமான பொருட்கள் வீடு வந்து சேரும். இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.
உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். உங்களின் நல்ல மனசை புரிந்து கொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வத்தை மறக்காதீர்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.
இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தயக்கம், தடுமாற்றம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தூக்கமின்மை, திடீர் பயணங்கள், சுபச் செலவுகள் வந்துப் போகும்.
ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் உத்யோகத்தில் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப்பு ஏற்படும்.
சுக-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் தாயாருக்கு இரத்த அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். என்றாலும் பணவரவு உண்டு. புது வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.
ராகு 10-ல் வருவதால் வெளிவட்டாரத்தில் வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள். படபடப்பு, டென்ஷன் விலகும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். பழைய நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பிரிஜ், ஏசி வாங்குவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். கன்னிப்பெண்களே! விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். காதல் கனியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்கும். தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்று முடிப்பீர்கள். பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவும் பெருகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ராகு 10-ம் வீட்டிற்கு வருவதால் உத்யோகத்தில் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரும். முக்கிய ஆவணங்களை கையாளும் போது கவனம் தேவை. திடீர் இடமாற்றம் உண்டு. வேலைசுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். கணினி துறையினர்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியுயர்வும் கிட்டும். கலைஞர்களின் திறமைக்கு பரிசு, பாரட்டு கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவை தட்டும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, சொந்தம்-பந்தங்களிடையே கருத்து மோதல் என பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வேண்டா வெறுப்புடன் பார்த்தப் பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். மகனை படிப்பு-வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். வீட்டில் பழுதான ப்ரிஜ், ஏசி, வாசிங்மிஷினை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளி மாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் அஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்தப்பாருங்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்துப் போகும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பண உதவி கிட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம், செல்போன் வாங்குவீர்கள். வேலை அமையும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு உண்டு.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் மனஇறுக்கம், வீண் டென்ஷன், குடும்பத்தில் சச்சரவுகள், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொந்தரவு வந்துப் போகும். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். உங்களின் பலவீனத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். பணம், நகைகளை கவனமாக கையாளுங்கள்.
கேது 4-ம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவர்வழி உறவினர்களிடையே கருத்துமோதல்கள் வந்துபோகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஆன்மீகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவார்கள். வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டு, பதவியுயர்வு என உண்டு.
இந்த ராகு-கேது மாற்றம் சின்ன சின்ன ஏமாற்றங்களையும், குழப்பங்களையும் தந்தாலும் தொலைநோக்கு சிந்தனையால் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் உள்ள திருக்கண்ணங்குடி எனும் ஊரில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரரை வணங்குங்கள். மூடை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.