குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மீனம்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:50 IST)
வெள்ளையுள்ளமும், வெளிப்படையானப் பேச்சு கொண்டவர்கள். மனதில் சரியென தோன்றுவதை திட்டவட்டமாக செய்து முடிப்பீர்கள். குரு பகவான் இப்பொழுது 15.12.2009 முதல் விரய வீட்டான 12-ல் நுழைவதால் கொஞ்சம் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். குடும்பத்தில் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டைப் போட வேண்டாம். தண்ணீரும் தாமரை இலையும் போல இல்லாமல் மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப் போங்கள்.

சாதாரணமாக தொலைப்பேசியில் சொன்னாலே முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகி முடியும். அடுத்தவர்களை நம்பி குடும்ப விஷயங்களை ஒப்படைக்க வேண்டாம். எல்லாவற்றிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. நீண்டநாளாக செல்ல வேண்டுமென நினைத்த புகழ் பெற்ற புண்ணிய‌த் தலத்திற்கு சென்று வருவீர்கள். மனம்விட்டுப் பேசுவதாக நினைத்து நண்பர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை உளறிக் கொட்ட வேண்டாம். யோகா, தியானம் செய்யுங்கள்.

4.5.2010 முதல் 6.11.2010 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். மருத்துவச் செலவுகள், மனதிற்கு பிடித்தமானவர்களின் இழப்பு, சிறு சிறு ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள் வந்து நீங்கும். இக்காலகட்டத்தில் லாகிரி வஸ்துகளை தவிர்க்கப் பாருங்கள்.

குரு பகவான் உங்கள் சுகஸ்தானமான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் சாலையை கடக்கும் போதிருந்த வாகன பயம் நீங்கும். பழுதான வாகனம் ஓடும். தாயாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். நகரத்திற்கு வெளியே வாங்கியிருந்த இடத்தை விற்று நல்ல இடத்தில் வீடு வாங்குவீர்கள். தவறான பாதையிலிருந்து மாறுவீர்கள்.

குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களை சுற்றியிருப்பவர்களின் தராதரத்தை புரிந்து கொள்ளுவீர்கள். எதிரிகளின் பலம் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல் திட்டம் தீட்டுவீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார். கால் வலி, இடுப்பு வலி குறையும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அடிக்கடி பயணங்கள் இருக்கும். வடமாநிலத்தவர் உதவுவார்கள். அரசு விஷயங்கள் முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். பணம் வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். ஆபரணங்கள் சேரும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பழுதாகியிருந்த டிவி, ஃப்ரிஜ் மாற்றுவீர்கள். சிலர் புது வீட்டில் குடிபுகுவார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். நீண்டநாள் பிராத்தனைகளை முடிப்பீர்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் படபடப்பு, முன்கோபம், காரியத்தடைகள் வந்து நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டுப் பயணம் அமையும். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலக்கட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்குள் நிற்பதுடன், உங்களின் லாப-விரையாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் தூக்கமின்மை, உடல் சோர்வு, சிறு சிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். வழக்குகளில் கவனம் தேவை.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. பலவகையில் கடன் வாங்கி புது முதலீடு செய்வீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். ஆனால் வேலையாட்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். கமிஷன், உணவு, ஏஜென்சி மூலம் பணம் வரும். இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிக லாபம் கிடைக்கும். புது ஏஜென்ஸிகளையும் எடுப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். இரும்பு, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.

உத்‌தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். அடிக்கடி விடுப்பிடில் செல்ல வேண்டாம். மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். அனாவசியமாக அடுத்தவர்களின் விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். உயரதிகாரி உங்கள் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பார். ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்காதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வேலை நிமிர்த்தம் பெற்றோரை விட்டு பிரிவீர்கள். கல்யாணம் நினைத்தபடி முடியும்.

மாணவர்களே! அலட்சியமாக இருக்காதீர்கள். வகுப்பறையில் அநாவசியப் பேச்சு வேண்டாம். கணித, மொழிப்பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்குக்குங்கள்.

கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.

விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்துவதாக நினைத்து போலி விதைகளை வாங்கி ஏமாற வேண்டாம்.

அரசியல்வாதிகளே! புது பதவிக்கு ஆசைபடாதீர்கள். இருப்பதை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த குரு மாற்றம் தொலை நோக்குச் சிந்தனையாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் ஓரளவு வளர்ச்சியை தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்