ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : மிதுனம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (18:20 IST)
மனிதநேயமும், மாறாத பக்தியும் கொண்டவர்களே! உங்களுக்கு இந்த ராகுகேதுப் பெயர்ச்சி பல புது அனுபவங்களை தரப்போகிறது.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து நின்று காரியத்தடைகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்தவர் இப்பொழுது உங்களுக்கேத் தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரப் போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. என்றாலும் களஸ்த்தர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் சின்ன சின்ன பிரச்சனைகளும் பெரிதாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குழந்தை பாக்யம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். வருமான அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். திடீர் பயணங்களுக்கு குறையிருக்காது.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்கால கட்டத்தில் இளைய சகோதர வகையில் நல்லது நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூர்வபுண்யாதிபதி சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு, வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, கௌரவப் பதவிகள், வீடு, மனை மூலம் லாபம், புது வாகனம், மகளுக்கு திருமணம் என யாவும் உண்டாகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் குடும்பத்தில் குழப்பம், கருத்துமோதல்கள், பணப்பற்றாக்குறை, மன வருத்தங்கள் வந்து நீங்கும்.

பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களின் கௌரவத்தை உயர்த்துவார்கள். அவர்களின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முடிப்பீர்கள். பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நெருங்கியவரானாலும் மற்றவர்களுக்காக ஜாமின் மனுக்களில் கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணத்தடைகள் நீங்கும். மாதவிடாய்க்கோளாறு, மன உளைச்சல் விலகும். பெற்றோரின் பாசமழையில் நனைவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் லாபம் பெறுவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகள் கைக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துக் கொள்வீர்கள். உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கணிணி துறையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கலைத்துறையினர்கள் போட்டி, பொறாமைகளுக்கு நடுவில் வெற்றி பெறுவார்கள். உங்களின் படைப்புகளுக்கு கைத்தட்டலுடன், காசும் சேரும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி சமயோஜித புத்தியுடன் பேச வைப்பார்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலத்தைக் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். ராசிக்குள் கேது அமர்வதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒரு சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியுடன் கருத்துமோதல், வீண் செலவுகள் வரும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் அநாவசியமாக அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.
10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதர வகையில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

தியானம், யோகாவில் ஈடுபடுங்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவதால் தெய்வபலம் கூடும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களைப் பேசி ஆறுதல் அடைய வேண்டாம். மாணவர்கள் விளையாட்டைக் குறைந்து படிப்பில் தீவிரம் காட்டுவது நல்லது. வகுப்பறையிலும் முன் வரிசையில் வந்து அமருங்கள். நண்பர்களுடன் சுற்றித்திரிவதைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

இந்த ராகுகேது மாற்றம் வேலைச்சுமையையும், விவாதங்களையும் தந்தாலும் விட்டுக் கொடுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றியையும் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்