2009 ஆங்கில வருட‌ப் பலன் : ரிஷபம்

புதன், 31 டிசம்பர் 2008 (18:36 IST)
விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். எல்லையில்லா அன்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர்களும் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்டு ஆகிய மாதங்களில் திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் தள்ளிப் போய் கொண்டிருந்ததே! இனி நல்ல மாப்பிள்ளை அமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும்.

சகோதர வகையில் இருந்த குழப்பம் தீரும். பூர்வீக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய பெரிய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நட்பால் ஆதாயமடைவீர்கள். செப்டம்பர் மாத முற்பகுதி மற்றும் டிசம்பர் மாத பிற்பகுதியில் எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.

ஆனால் வருடம் பிறக்கும் போது செவ்வாயும், சூரியனும் 8-ல் மறைந்து கிடப்பதால் உடன்பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும். சிலர் உங்கள் மேல் வீண்பழி சுமத்துவார்கள். அரசு காரியங்கள் தடைபட்டு முடியும். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 10-ம் வீட்டிற்கு செல்வதால் மற்றவர்கள் சொல்வதை நம்பாமல் யோசித்து முடிவெடுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். நீண்ட காலம் பழகியவர்களாக இருந்தாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடாமல் இருப்பது நல்லது. செப்டம்பர் 15 முதல் வாகனப் பழுது வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.

26.9.2009 முதல் சனி பகவான் 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் கர்ப்பினிப் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அதிக பளுவை தூக்குவதோ, மாடிப்படி ஏறுவதோ கூடாது. 27.10.2009 முதல் ராகு-கேது இடம் மாறுவதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்துப் போகும். பார்வைக் கோளாறு, மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்து வந்த வேலையாட்களை மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் வேலைச்சுமையும், வீண் பழியும் வந்தாலும் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. வேற்று மதத்தவர், மொழியினர் உதவுவார்கள். இந்த 2009-ம் ஆண்டு தடை கற்களை படிகட்டுகளாக்கி நினைத்ததை அடைய வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்