2009 ஆங்கில வருட‌ப் பலன் : சிம்மம்

புதன், 31 டிசம்பர் 2008 (18:26 IST)
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் எண்ணங்கொண்ட நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். நம்பி வந்தவர்களுக்கு உதவும் மனசுப்படைத்தவர்கள். இனிமையாக காரியங் களைச் சாதிப்பவர்களும் நீங்கள் தான். உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். தைரியம் கூடும். சுக்ரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தடைப்பட்ட திருமணம் முடியும். வீடு கட்டும் பணி நிறைவடையும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுக்ரன் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்து தனஸ்தானத்தை பார்ப்பதால் பணப்புழக்கம் குறையாது.

புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துப் போனதே! இனி விட்டுக் கொடுத்துப் போவீர்கள். உங்களை விரோதியாக பார்த்தவர்களெல்லாம் மனம் மாறி வந்து பேசுவார்கள். பிள்ளைகளின் வருங்காலத்தில் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல மணமகள் அமைவார். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 7-ம் வீட்டிற்கு செல்வதால் குழந்தை பாக்யம் கிட்டும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்.

புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. செப்டம்பர் மாத இறுதியில் ஜென்ம சனி விலகுவதால் தோல் நோய், ஞாபக மறதி, நெஞ்சு வலி விலகும். உறவினர் பகை நீங்கும். தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். அக்டோபர் மாத இறுதியில் ராகுவும்-கேதுவும் சாதகமாக மாறுவதால் தாழ்வுமனப்பான்மை நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வேற்றுமதத்தவர், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.

ஏப்ரல் மத்திய பகுதியிலிருந்து மே இறுதி பகுதி வரை மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. ஜீலை மத்திய பகுதியிலிருந்து உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனமடைவதால் உடல் நலம் பாதிக்கும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களின் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும் லாபத்திற்கு குறையிருக்காது. புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் வேலைசுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரி உங்கள் திறமையை பாராட்டுவார். பதவியும், சம்பளமும் உயரும். இந்த புத்தாண்டு மாறுபட்ட அனுபவங்களை தந்தாலும் மற்றவர்கள் மதிக்கும்படி செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்