2009 ஆங்கில வருட‌ப் பலன் : தனுசு

புதன், 31 டிசம்பர் 2008 (18:21 IST)
அல்லல்கள் வந்தாலும் கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது எடுத்தக்காரியங்களை முடித்துக்காட்டும் திறமைபடைத்த நீங்கள், கடலளவு அன்புகொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் இந்தப்புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத வெற்றி உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பழைய பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவிக்கு இருந்த மாதவிடாய்க் பிரச்சனை, கழுத்து வலி விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். காற்றோட்டம், தண்ணீர் வசதி, வெளிச்சம் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள்.

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மத்தியப் பகுதி வரை உள்ள காலகட்டங்களில் திடீர் யோகம் உண்டாகும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். புது நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். ஜீன் மற்றும் ஜீலை மத்தியப் பகுதிக்குள் சொத்து வாங்குவது விற்பது சுலபமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

ஜனவரி மாதத்தில் உங்கள் ராசி நெருப்பு கிரகங்களின் பிடியில் வருவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல், களைப்பு வந்து நீங்கும். குடும்பத்தில் யாரும் தன்னை புரிந்து கொள்ள வில்லை என சில சமயங்களில் வருந்துவீர்கள். முன்கோபம் தவிர்ப்பது நல்லது. ஏப்ரல் மத்தியிலிருந்து மே மாதத்தின் மையப் பகுதி வரை சூரியன் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் போக்கை கண்காணியுங்கள். அவர்களின் கெட்டநண்பர்களை ஒதுக்கப் பாருங்கள். செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் வரும். வழக்குகளில் கவனமாக செயல்படுங்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும்.

கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை அதிகாரி ஏற்பார். ஊழியர்கள் மறைமுகமாக உங்களை எதிர்ப்பார்கள். சில சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் பாராட்டுக் கிட்டும். இந்தப் புத்தாண்டு குறுகிய மனப்பான்மையிலிருந்து உங்களை விடுபட வைத்து பரந்த மனசால் வெற்றி பெற வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்