குருப் பெயர்ச்சிப் பலன்கள் : மேஷம்

webdunia photoWD
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவான் 06.12.2008 முதல் பத்தாவது வீட்டிற்குள் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடத்து குரு பதவியை கெடுக்கும், புகழைக் குறைக்கும் என்று நினைத்து அச்சப்படாதீர்கள்.

மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் அதிசாரம் மற்றும் வக்ரகதியில் 11ஆம் வீட்டிற்கு குரு செல்வதால் அந்த கால கட்டங்களில் யோக பலன்கள் அதிகரிக்கும். 22.03.2009 முதல் 15.12.2009 முடிய குரு பகவான் உங்கள் ராசி நாதனான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தில் செல்வதால் உங்களின் வளர்ச்சிப் பணிகள் இந்த குரு மாற்றத்தால் தடைப்படாது.

இருந்தாலும் உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் பாதகாதிபதியான சனி வீட்டில் தொடர்ந்து செல்வதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வெடிக்கும். செய்யாத தவறுக்கு வீண் பழி வரக்கூடும். பிள்ளைகளைப் போராடி நல்வழிப்படுத்த வேண்டிவரும். பொறுப்பில்லாமல் சில நேரங்களில் நடந்து கொள்வார்கள். அவர்களின் போக்கை கண்காணியுங்கள்.

தவறானவர்களுடன் சேர்ந்து கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயர் படிப்பு மற்றும் திருமணத்தை அலைந்து முடிக்க வேண்டி வரும். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் எந்த முதலீடும் செய்யாதீர்கள். வருமான வரிக் கணக்கை உரிய நேரத்தில் செலுத்தி விடுங்கள். மூத்த சகோதர வகையில் அலைச்சலும் செலவும் இருக்கும்.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு பகவான் உங்கள் லாப வீட்டில் அமர்வதால் தடைகள் உடைபடும். எதிர்பாராத பண வரவு கிட்டும். மற்றவர்களுக்காக எதையும் செய்து கொடுத்த நீங்கள், தனக்கென்று வரும்போது தடுமாறி நின்றீர்களே, இனி அந்த தடுமாற்றம் நீங்கும். காசு, பணம் சேரும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். வேறு வீடு மாறுவீர்கள். நவீன வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை ஆகியவற்றால் சோர்வாகக் காணப்படுவீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நிதானமாக கையாளுங்கள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் வரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். சொத்து விவகாரத்தில் கவனம் தேவை. வழக்குகள் இழுபறியாக இருக்கும்.

ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதிய மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் கொடுத்து கையகப் படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷங்களைப் பற்றி பேசவேண்டாம்.

வியாபாரம் சூடு பிடிக்கும். வரவேண்டிய பாக்கிகளை அலைந்து திரிந்து வசூலிப்பீர்கள். போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களை கலந்தாலோசித்து செயல்படுங்கள். கூட்டுத்தொழில் சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். புரோக்கரேஜ், கம்ப்யூட்டர், உணவு வகைகள் மற்றும் ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் உங்களைப் பற்றி தவறாக சொல்லி வைப்பார்கள். அதிகாரிகளில் ஒத்துழைப்பு குறையும். சக ஊழியர்களுடன் சச்சரவுகள் வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளுடன் உரையாடும்போது நிதானம் தேவை. திடீர் இடமாற்றம் வரும். சில அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டி வரும். பதவி உயர்வுக்கு முயல்வீர்கள். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் பணிபுரிய வேண்டி வரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புது உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களுக்கு உயர் கல்வியில் வெற்றியுண்டு. வருடத்தின் மத்தியப் பகுதியில் வேலை கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். மற்றவர்களின் வார்த்தைகளை நம்பி பெற்றோர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாக வெற்றியடையும். மாணவ-மாணவியர்களின் அறிவுத் திறன் மற்றும் கேள்வி கேட்கும் ஆற்றல் கூடும்.

உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். சக மாணவர்கள் உதவுவர். விளையாட்டில் பரிசும் பாராட்டும் கிடைக்கும். கலைஞர்களுக்கு பழைய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். பரபரப்புடன் காணப்பட்டாலும் சில நேரங்களில் ஆதாயமே இருக்காது. மற்ற கலைஞர்களை அனுசரித்துப் போங்கள். சம்பள விடயத்தில் கறாராக இருங்கள்.

பொதுவாக இந்த குரு பெயர்ச்சி உங்களை பக்குவப்படுத்துவதுடன் செல்வச் செழிப்பையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம் :

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுந்தரேஸ்வரரையும், அங்கே அஷ்டமா சித்திகளையும் அருளிக்கொண்டிருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் மிருகசீரிடபம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்