குருப் பெயர்ச்சிப் பலன்கள் : ரிஷபம்

webdunia photoWD
கலகலப்பாகச் சிரித்துப் பேசுவதுடன் மற்றவர்களையும் சிரிக்க வைப்பீர்கள். உண்மைக்குப் புறம்பாக எதையும் செய்ய மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் அமர்ந்திருந்து எண்ணற்ற தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் நீட்சம் பெற்று அமர்கிறார். 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப இனி நன்மைகள் தேடி வரும்.

குருவின் அருட் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் இனி உடல்நலம் சீராகும். சோகமான முகம் மலரும். கால் வலி, தலை வலி நீங்கும். கணவன்- மனைவிக்குள் காரண காரியமே இல்லாமல் காரசாரமான விவாதங்களெல்லாம் வந்ததே, இனி அந்த நிலை மாறும். தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

அரைகுறையாக பாதியில் நின்ற பல வேலைகள் உடனே முடியும். பிரபலங்களை சந்தித்து மகிழ்வீர்கள். கெளரவப் பதவிகள் தேடி வரும். சகோதர வகையில் இனி பாசப் பிணைப்பு அதிகரிக்கும். சொத்துப் பிரச்னையை சுமுகமாக முடிப்பீர்கள்.

உங்கள் தயக்கம், சோம்பல், முன்கோபம் எல்லாம் மாறும். உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்று தெளிவடைவார்கள். மகளுக்கு நீங்கள் விரும்பியபடி நல்ல வரன் வந்தமையும். வேலையும் கிடைக்கும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் கொஞ்சம் கவனமாக செயல்படப்பாருங்கள். வீண் விவாதங்கள், மன உளைச்சல், மருத்துவச் செலவுகள் வரும்.

முன்பு கடனாக, கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தை கொடுத்து முடிப்பீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டைப் பார்ப்பதால் சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். பிரிந்து சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். வராது என நினைத்திருந்த பணம் கைக்கு வரும். வழக்குகள் விரைந்து முடியும். பாதியிலேயே நின்ற வீடு கட்டுமானப் பணி முழு வீச்சில் முடிந்து சிறப்பாக கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

தந்தையாரின் உடல்நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

அரசு காரியங்களில் இருந்த இழுபறி நிலை மாறும். குலதெய்வப் பிராத்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் கோபப் பார்வை விலகும்.

வியாபாரத்தில் மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கியெல்லாம் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களுக்காக இனி பயப்படவேண்டாம். ரியல் எஸ்டேட், மருந்து, ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகமாகும். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். சம்பளம் கூடும். புது வேலைக்கும் முயற்சி செய்யுங்கள்.

இதைவிட அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சக ஊழியர்களோட இருந்த ஈகோப் பிரச்னை விலகும். பதவி உயர்வுக்காக பலமுறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாமல் போனீர்களே, இப்போது எழுதுங்கள். உடனே வெற்றி கிட்டும். தனியார் நிறுவனம், கணினி துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அவசர முடிவுகள் வேண்டாம்.

கன்னிப் பெண்களுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் நடக்கும். தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். முகத்திலிருந்த பரு, தோலில் நமைச்சல், பசியின்மை விலகும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். காதல் கைகூடும். மாணவர்களுக்கு மந்தம், மறதி, அலட்சியம் விலகும். ஜெயிக்க வேண்டும் என்ற உந்துதலுடன் ஆர்வமாகப் படிப்பார்கள். உயர் கல்வி வெளிநாட்டில் அமையும். பெற்றோரின் அன்பைப் பெறுவார்கள்.

கலைஞர்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். கிசுகிசுத் தொல்லை நீங்கும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் உங்கள் திறமையை பயன்படுத்திக் கொள்ளும். நாடாள்பவர்களின் கரங்களால் பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

இந்த குரு மாற்றம் துவண்டிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் வாழ்க்கையின் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம் :

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தேப்பெருமா நல்லூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ விஸ்வநாதரையும், அங்கே அருள்பாலிக்கும் அன்னதான குருவையும் ரேவதி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். மூட்டை சுமப்பவர்களுக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்