குருப் பெயர்ச்சிப் பலன்கள் : மிதுனம்

webdunia photoWD
மற்றவர்கள் முடியாது என பின்வாங்கும் செயல்களை தைரியமாக முன்வந்து செய்யக் கூடியவர்களே! தன்னை மதிக்காதவர்களுக்கும் மறுக்காமல் உதவுபவர்களே! இதுவரையில் உங்களின் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த குரு பல நன்மைகளையும், சில சங்கடங்களையும் தந்தாரே!

இப்போது குரு உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார். உங்களுக்கு பாதகாதிபதியான குரு பாதக ஸ்தானத்தை விட்டு மறைவதால் நல்லதே நடக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த சலசலப்புகள், மனப்போரெல்லாம் நீங்கும்.

பண வரவு திருப்திகரமாக அமையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி பிரிவில் இடம் கிடைக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த சகோதரி சாதகமாக நடந்துகொள்வார். பாகப் பிரிவினை மற்றும் சொத்துப் பிரச்சனைகளில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும்.

எவ்வளவு பணம் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். இந்த ஒரு வருடத்தில் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். முன்தேதியிட்டு காசோலை தரும் போது கவனம் தேவை. புதிதாக சொத்து வாங்கும் போது அதற்குரிய ஆவணங்களை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது. லேசாக தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, முன்கோபம், மறதி வந்துநீங்கும்.

வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. நள்ளிரவு பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியடைவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு விவகார ங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். தனிநபர் விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

வியாபாரிகளுக்கு ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புது திட்டம் தீட்டுவீர்கள். வேலையாட்களை நீங்கள் பாகுபாடு பார்க்காமல் சரிசமமாக நடத்துவதால் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய ஏஜென்ஸி வரும். ஏற்றுமதி - இறக்குமதி வகைகள், உணவு, மூலிகை, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தி விடுவது நல்லது.

உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். முக்கிய ஆவணங்களைக் கையாளும்போது நிதானம் தேவை. அலுவலகம் பற்றியோ, அதிகாரிகள் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தனியார், கணினி துறையில் இருப்பவர்களுக்கு அதிரடி முன்னேற்றம் உண்டு.

கன்னிப் பெண்கள் தங்கள் நண்பர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர் யார்? என்பதை உணர்வார்கள். காதல் விவகாரங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசிப்பது நல்லது. கண் எரிச்சல், தூக்கமின்மை வந்துபோகும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு வெறுவார்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் தேவை.

கலைத் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். என்றாலும் கிசுகிசுக்கள் வந்து போகும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

இந்த குரு மாற்றம் அலைச்சலையும், செலவையும் ஒருபுறம் தந்தாலும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தந்து சாதிக்க வைக்கும்.

பரிகாரம் :

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீசெண்பகாரண்ணியேஸ்வரரையும் அங்கே உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று சென்று வணங்குங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்