குருப் பெயர்ச்சிப் பலன்கள் : கடகம்

webdunia photoWD
சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் ஓயமாட்டீர்கள். மற்றவர்களின் தேவையறிந்து உதவும் குணமுடைய நீங்கள், எல்லையில்லா அன்பு கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் அமர்ந்திருந்த குரு பகவான் இப்போது ஏழாம் வீட்டில் அடி எடுத்து வைக்கிறார். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் எப்போது பார்த்தாலும் வெறுப்பும், சண்டையும் வந்து கொண்டிருந்ததே, அந்த நிலைமை போய் இனி நகமும் சதையுமாக இணைவீர்கள்.

வாங்கிய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பிள்ளைகளின் பிடிவாத குணம் விலகும். இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வேலை கிடைக்கும். படிப்பு இருந்தும், அழகு இருந்தும், கை நிறைய சம்பாதித்தும் வந்த வரனெல்லாம் தட்டிப்போனதே! பார்ப்பவர்களெல்லாம் வியக்கும்படி மகளுக்கு நல்ல வரன் உடனே அமையும்.
சகோதர, சகோதரிகள் உங்களின் நல்ல மனதை இனி புரிந்து கொள்வார்கள்.

வெளிச்சம் இல்லாத, அடிக்கடி மின்சாரம் தடைபடும் வீட்டில் இருந்தீர்களே! இனி காற்றோட்டமான, நல்லவர்கள் வாழும் இடத்திற்கு வீடு மாறுவீர்கள். லோன் எடுத்து சொந்த வீடு வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களெல்லாம் முன்பு போல் ஒதுங்கி நிற்காமல் இனி வலிய வந்து பேசுவார்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் காரியத் தடைகள், கால் வலி, தலை வலி, பணப் பற்றாக்குறை, வீண் பழி ஆகியன வந்து நீங்கும். உடல் பருமனை பயிற்சி மூலம் குறைக்கப் பாருங்கள். அழகு கூடும். முகத்தில் சிரிப்பு அரும்பும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். பழுதான மின்சார, மின்னணு பொருட்களை வீசி விட்டு புதுசு வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொந்த ஊரில் கோயில் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகளில் தாமதமில்லாமல் வெற்றி கிடைக்கும். அரசு காரியங்கள் சுமுகமாக முடியும்.

தாழ்வு மனப்பான்மை உங்களை விட்டு விலகும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புது வண்டி வாங்கலாம் என நினைத்து கொஞ்சம் பணம் எடுத்து வைக்கும் போதெல்லாம் வேறு செலவுகள் வந்ததே! நல்ல வாகனம் இனி அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

வியாபாரத்தை அதிக முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வேலையாட்களை மாற்றுவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு, எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையை சேர்த்துப் பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது! இனி அந்த நிலை மாறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உடனே கிட்டும். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அற்புதமான நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். எங்கு வேலைக்குச் சென்றாலும் பாதியிலேயே விட்டவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் நடக்கும். உடலில் இருந்த நோயெல்லாம் விலகும். காய், கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். விரும்பிய துணி, நகைகளை வாங்குவீர்கள். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் இனி அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். தெரியாதவற்றை ஆசிரியரிடம் தைரியமாக கேட்பார்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு, நல்ல வாய்ப்புகளெல்லாம் விலகிப் போனதே! வேலைகளை திறம்பட செய்து கொடுத்தும் பணம் வராமல் தவித்தீர்களே! இனி வருமானம் உயரும்! புகழ் கூடும்!

இந்த குரு பெயர்ச்சி உங்களை உற்சாகப்படுத்துவதுடன் அடிப்படை வசதிகளை பல மடங்கு உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம் :

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கச்சூரில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருந்திட்டேஸ்வரரையும் அங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் ரோகிணி நட்சத்திரத்தன்று சென்று வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்