குருப் பெயர்ச்சிப் பலன்கள் : சிம்மம்

webdunia photoWD
பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களையும் திறன் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, வெள்ளையுள்ளமும், வெளிப்படையானப் பேச்சும் உங்களிடம் உண்டு. இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பிள்ளைகளை, குடும்பத்தை உயர்த்திய குரு பகவான் இப்போது ஆறாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

சகட குருவாச்சே! சங்கடங்களையும் பணப் பற்றாக்குறையையும் தரும் இடமாச்சே! என்று கலங்காதீர்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வக்ரகதியில் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டிற்கு குரு செல்வதாலும் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் குரு செல்ல இருப்பதாலும் கெடு பலன்கள் குறைந்து நல்லதே நடக்கும்.

பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சச்சரவு வந்தாலும் உடனே சமாதானமடைவீர்கள். இனி உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ஆனால், முன்பு போல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.

உங்களுக்காகவும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உங்கள் மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

வக்ரமாகவும், அதிசாரமாகவும் குரு பகவான் மே, ஜூன், ஜூலை மாதங்களில் 7ஆம் வீட்டிற்கு சென்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் அக்கால கட்டத்தில் வழக்கில் வெற்றி கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். திருமணம் ஏற்பாடாகும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பி.களும் உதவுவார்கள். வேலை கிடைக்கும்.

உடன்பிறந்தவர்கள் வகையில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்துபோகும். அனுசரித்துப் போவது நல்லது. விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். மறதியால் பொருட்களை இழக்க நேரிடும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். லேசாக கால் வலி, உடல் அசதி, தோலில் நமச்சல் வந்து நீங்கும். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். சொந்தம் பந்தங்கள் தேடி வருவார்கள். என்றாலும் விமர்சனங்களும், வதந்திகளும் அதிகரிக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். அண்டை அயலாரிடத்தில் அளவுடன் பழுகுவது நல்லது.

வியாபாரிகளே! இருக்கிற வியாபாரத்தைப் பெருக்கப் பாருங்கள். மற்றவர்களை நம்பி புது முதலீடுகள் வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். பண விடயத்தில் கறாராக இருங்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக இனி வேலையை முடிப்பார்கள். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். இரும்பு, இறைச்சி, ரசாயன வகைகள் மூலம் லாபம் வரும். கமிசன் வகைகளாலும் ஆதாயம் உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் பிறக்கும். வெளி நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது மொட்டைக் கடுதாசி வரும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது.

உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு. குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாடுபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகம் சார்பாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு குழப்பம் விலகும். உயர் கல்வியில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடந்தேறும். மாத விடாய்க் கோளாறு, தலை வலி வந்து போகும். மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை உடனுக்குடன் படித்து முடிப்பது நல்லது. அலட்சியப் போக்கு, வீண் அரட்டைப் பேச்சு வேண்டாம். கணிதப் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். ஆசிரியரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு சின்ன சின்ன மனசங்கடங்கள் வந்தாலும் மகிழ்ச்சியில் குறைவிருக்காது. அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பாத்தியம் கூடும். மூத்த கலைஞர்களை அனுசரித்துப் போங்கள்.

ஆகமொத்தம் இந்த குரு மாற்றம் உங்களுக்கு வேலைச் சுமையையும், செலவையும் ஒருபக்கம் கொடுத்தாலும் சமயோசித புத்தியாலும், வி.ஐ.பி.களின் ஆதரவாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம் :

தஞ்சை-திருக்கண்டியூருக்கு அருகிலுள்ள திருவேதிக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீவேதபுரேஸ்வரரையும் அங்குள்ள ஸ்ரீ தட்சிணா மூர்த்தியையும் புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தொழுநோயாளிகளுக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்