குருப் பெயர்ச்சிப் பலன்கள் : கன்னி

webdunia photoWD
முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள் திடீர் முடிவெடுப்பதில் வல்லவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் தவியாய் தவிக்க வைத்த குரு பகவான், வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் அற்புத வீடான ஐந்தாம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தில் குரு அள்ளித் தருவார் என்ற அனுபவ மொழிக்கேற்ப அனைத்து வசதிகளையும் தரப்போகிறார்.

குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு என்று இருந்ததே! ஒரு வீட்டில் இருந்துக் கொண்டே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்தீர்களே! அந்த நிலை மாறும். இனி உங்களின் அறிவுரையை குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும்.

நாடாள்பவர்களின் நட்பு கிட்டும். நீங்களும் ஆள்வீர்கள். ஒளியிழந்த உங்கள் முகம் இனி பளபளப்பாகும். குன்றிய தோள்கள் நிமிரும். பார்வைக் கோளாறு நீங்கும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். உங்கள் மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குணமுள்ள மாப்பிள்ளை அமைவார்.

ராசிக்கு 9ஆம் வீட்டை ஐந்தாம் பார்வையால் குரு பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த தகராறு நீங்கும். அவரின் உடல் நிலை சீராகும். உங்களின் வாழ்க்கைத் தரம் ஒருபடி உயரும். சுப நிகழ்ச்சிகளில் ஓரமாக உட்கார்ந்திருந்த நீங்கள் இனி முதல் வரிசையில் ஒய்யாரமாக அமர்வீர்கள்.

பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரியுடன் இருந்து கருத்து மோதல்கள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு பண வரவு அதிகரிக்கும்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். பழுதான பழைய சாதனங்களை மாற்றிவிட்டு புதியது வாங்குவீர்கள். எங்காவது அவசரமாக செல்ல வேண்டுமென்றால் அப்பொழுது தானே உங்கள் வண்டி சதி செய்யும், அடிக்கடி செலவும் வைக்கும்? இனி நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். அரசியல்வாதிகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.

உத்யோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரியும், சக ஊழியர்களும் இனி நேசக்கரம் நீட்டுவார்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது தேடி வரும். எதிர்த்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.கணினி துறையினர்க்கு அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு இருந்த காதல் தோல்வி நீங்கும். நல்ல பண்பாளர்கள் அறிமுகமாவார்கள். அடிவயிற்றில் வலி, சைனஸ் (மூக்கடைப்புத் தலை வலி) தொந்தரவுகள் நீங்கும். பெற்றோருடன் இருந்த கருத்து மோதல் விலகும். நீண்ட நாளாக தடைபட்ட கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வரும்.

மாணவர்கள் விளையாட்டை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நண்பர்களாவார்கள். உயர் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவார்கள்.

கலைஞர்களே! வீண் வதந்திகளும், அவபெயர்களும் வந்ததே! இனி உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். அரசால் கவுரவிக்கப்படுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி போராட்டங்களிலிருந்து விடுபட வைப்பதுடன் புதுத் திட்டங்களை நிறைவேற்றச் செய்வதாக அமையும்.

பரிகாரம் :

திருவையாறுக்கு அருகிலுள்ள தில்லைஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநெய்யாடியப்பரையும் ஞான வடிவாய்த் திகழும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் பூராடம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கைம்பெண்களுக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்