குருப் பெயர்ச்சிப் பலன்கள் : துலாம்

webdunia photoWD
எதிலும் புதுமையைப் புகுத்தும் புரட்சியாளர்களான நீங்கள், தடாலடியான முடிவுகள் எடுத்து மற்றவர்களை திகைக்க வைப்பதில் வல்லவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்துகொண்டு, புது முயற்சியில் எதில் இறங்கினாலும் அணை போட்டுத் தடுத்தாரே, அந்த குரு பகவான் 06.12.2008 முதல் 15.12.2009 வரை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கு ரோகாதிபதியான குரு பகவான் நீச்சமாகி வலுவிழந்து நான்கில் அமர்வதால் கெடு பலன்கள் குறையும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு வக்ர-அதிசார கதியில் 5ஆம் வீட்டிற்கு செல்வதால் அக்கால கட்டம் உங்களுக்கு மிக அருமையாக இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் 21.01.2009 முதல் 21.03.2009 வரை குரு செல்வதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். முன்பிருந்ததைவிட உற்சாகமடைவீர்கள்.

இளைய சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். புதிய கோணத்தில் சிந்தித்து புதிய அணுகுமுறையில் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீணான சந்தேகங்களும், வாக்குவாதங்களும் வந்தாலும் குடும்ப ஒற்றுமை பாதிக்காது. உங்களைப் பற்றியோ, உங்கள் மனைவி, பிள்ளைகளைப் பற்றியோ வெளியில் உள்ளவர்கள் எதை சொன்னாலும், அதை பொருட்படுத்த வேண்டாம்.

உங்களின் பலம், பலவீனத்தை உங்கள் மனைவி சில நேரங்களில் எடுத்துச் சொல்வார், கோபப்படாதீர்கள். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களின் வெறுப்பைப் பிள்ளைகளின் மீது காட்ட வேண்டாம். உயர் கல்வி-வேலைவாய்ப்பு பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். பணப் புழக்கம் சுமாராகத்தான் இருக்கும். காசை சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கூட போராடித்தான் திருப்பிக் கொடுப்பீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

வீடு, மனை விற்பது, வாங்குவதில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னைகள் சம்பந்தமாக நீதிமன்றம் போக வேண்டிவரும். முடிந்தவரை நடுநிலையாளர்களை வைத்து லாபமோ, நஷ்டமோ பேசித் தீர்த்துக்கொள்ளப் பாருங்கள்.வறுத்த, பொரித்த அசைவ உணவுகளை தள்ளி வையுங்கள். கம்பு, கேழ்வரகு, கோதுமை உணவுகளையும் காய், கீரை வகைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோய் வரக்கூடும். மனச்சோர்வு அதிகரிக்கும்.

தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து நீங்கும். முடிந்த வரை யோகா, தியானம் ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். திருமணம், புதுமனைப் புகுதல், கோயில் விழாக்களில் கலந்து கொள்ளும் போது யாரைப் பற்றியும் விமர்சித்துப் பேச வேண்டாம். உறவு வட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று பழகுங்கள். அண்டை அயலாரின் அன்புத்தொல்லைகள் வரக்கூடும்.

வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று எதிலும் அவசரப்பட்டு அதிக முதலீடு செய்ய வேண்டாம்.மே, ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடுகளைச் செய்யலாம். எதிர்பாராத புது ஒப்பந்தங்கள் தேடிவரும். பங்குதாரர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அனுபவம் மிக்க வேலையாட்கள் உங்களை விட்டு விலகுவார்கள். புதிய ஆட்களைச் சேர்த்து பயிற்சி தருவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும். உங்களுக்கு எதிராகச் சிலர் சதித் திட்டம் தீட்டுவார்கள். பணியில் திடீர் இடமாற்றம் வரக்கூடும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் நல்ல சம்பளத்துடன் தேடி வரும். என்றாலும் ஆலோசித்து முடிவெடுங்கள். கழுத்து வலி, பார்வைக் கோளாறு வரக்கூடும்.

கன்னிப் பெண்களுக்கு வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். தடைபட்ட கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைக்கும். விலையுயர்ந்த நகைகளை கவனமாக கையாளுங்கள். காதல் கசந்து இனிக்கும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். சோதனைச் சாலையில் அமிலங்களைக் கையாளும் போதும், ஆய்வுகளில் ஈடுபடும் போதும், விளையாடும் போதும் கவனம் தேவை. சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றியுண்டு.

கலைத் துறையினருக்கு வருவாய் கூடும். உங்களை அவமதித்த நிறுவனங்கள் இப்பொழுது தேடிவரும். சக கலைஞர்களை அனுசரித்துப் போங்கள்.

இந்த குரு மாற்றம் திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்புகளை தருவதுடன், நீங்கள் யார்? உங்களை சுற்றியிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம் :

திருவாரூர்-நீடாமங்கலம் வெட்டாறு நதிக்கரையில் உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வில்லவனநாதேஸ்வரரையும், ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் ரேவதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்