ஈரமான மனசும், இனிமையான பேச்சும் கொண்ட நீங்கள், சில நேரங்களில் கறாராகவும் பேசுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் இருந்த குரு பகவான் ஓரளவு பணப் புழக்கத்தையும், குடும்பத்தில் அமைதியையும் தந்தார்.
இப்போது மூன்றாவது வீட்டிற்குள் நுழைகிறார். தன பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் மறைவதால் அலைச்சலுடன், ஆதாயம் கிடைக்கும். ஏழாவது வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.
ஆனாலும், அவ்வப்போது சின்ன சின்ன சண்டை சச்சரவும் வந்துபோகும். புது நட்பு கிடைக்கும். குரு உங்கள் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் பண வரவு குறையாது. தந்தையாரோடு இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். இலாப வீட்டையும் பார்த்துக் கொண்டிருப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள்.
மூத்த சகோதரர்கள் வகையிலிருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு உங்கள் ராசிக்கு 4ஆவது வீட்டிற்கு செல்வதால் அக்கால கட்டத்தில் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சிறு சிறு விபத்துகள், மன உளைச்சல் வந்து நீங்கும்.
06.12.2008 முதல் 20.01.2009 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் சாரத்தில் குரு செல்வதால் அக்கால கட்டத்தில் புது வேலை அமையும். தந்தை வழி சொத்துகள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். 21.01.2009 முதல் 21.03.2009 வரை உங்களின் பாதகாதிபதியான சந்திரனின் சாரத்தில் செல்வதால் வீண் செலவுகளும், அப்பா வழியில் சங்கடங்களும், வந்து நீங்கும்.
22.03.2009 முதல் 15.12.2009 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் நட்சத்திரத்திலேயே (அவிட்டம்) செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. அரசியல் இயக்கம் மற்றும் பொது நலச்சங்கங்களில் பெரிய பதவிகள் தேடி வரும்.
பிள்ளையிடம் நெருக்கம் உண்டாகும். உங்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். நீங்கள் எதிர்பார்த்த கல்விப் பிரிவில், நிறுவனத்தில் உங்கள் மகனுக்கு இடம் கிடைக்கும். உங்கள் மகளுக்கு திருமணம் முடியும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமையும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். கவுரவப் பதவிகள் தேடிவரும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள்.
வாகனத்தை இயக்கும்போது கவனச் சிதறல் வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அந்தரங்க விஷயங்கள் பேசவேண்டாம். வியாபாரத்தில் கண்டபடி முதலீடுகள் செய்யாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புதிய தொடர்புகள் கிடைக்கும். ஸ்டேஷனரி, கமிசன், உணவு விடுதி, புத்தக வெளியீடு மற்றும் கல்விக் கூடங்கள் மூலம் ஆதாயமடைவார்கள்.
உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் மறைமுகமாக சதி செய்வார்கள். வழக்கம்போல் வெளிப்படையாகப் பேசி சிக்கிக்கொள்ள வேண்டாம். மேலதிகாரியிடம் போராடி உயர் பதவியை பெறுவீர்கள். அதிகாரிகள் செய்யும் தவறுகளை வெளியில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். கணினி துறையைச் சார்ந்தவர்களுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
கன்னிப் பெண்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். மாத விடாய்க் கோளாறு, வயிற்று வலி வந்து நீங்கும். காதல் சறுக்கும். முக்கிய முடிவுகளை பெற்றோரின் ஆலோசனையின்றி செயல்படுத்த வேண்டாம். மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது. விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது.
மனப்பாட சக்தி கூடும். கணக்கு, அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடிவரும். மூத்த கலைஞர்களை வீணாக பகைத்துக் கொள்ளவேண்டாம். பேட்டிகளை தவிர்ப்பது நல்லது.
இந்த குரு மாற்றம் வறட்டு கௌரவம் பார்க்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன் படுத்தி முன்னேற வைக்கும்.
பரிகாரம் :
காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருக்குரங்கணின் முட்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வாலீஸ்வரரையும், ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் அசுவணி நட்சத்திரத்தன்று சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.