குருப் பெயர்ச்சிப் பலன்கள் : மகரம்

webdunia photoWD
சமாதானத்தையே விரும்பும் நீங்கள் சண்டையென்று வந்துவிட்டால் ஒருபிடி பிடித்து விடுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு விரைய வீட்டில் குரு அமர்ந்து நிறைய அலைச்சல்களை தந்தார். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து கையைச் சுட்டுக் கொண்டீர்கள். எல்லோரின் பேச்சைக் கேட்டு ஏமாந்து போனீர்கள். இப்பொழுது உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்வீர்கள். உடல் சதை போடும். மனைவி வழி உறவினருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரும்.

06.12.2008 முதல் 20.01.2009 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், 21.01.2009 முதல் 21.03.2009 வரை திருவோண நட்சத்திரக்காரர்களும், 22.03.2009 முதல் 15.12.2009 முடிய உள்ள காலக்கட்டத்தில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களும் எதிலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வக்ரம் மற்றும் அதிசாரத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி தன ஸ்தானத்திற்கு செல்வதால் அக்காலக்கட்டத்தில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் வாழ்க்கையில் உண்டாகும்.

குரு பகவான் 5ஆம் பார்வையாக பூர்வ புண்ணிய வீட்டை பார்ப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சு வார்த்தை மூலம் முடியும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்குவீர்கள்.

உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகும். சாதிக்கும் ஆற்றலும் பிறக்கும். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல நட்பு கிடைக்கும். குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் அதிக நாட்கள் செல்வதால் அவிட்ட நட்சத்திக்காரர்கள் விபத்துகள், பண இழப்பு, அரசுப் பகை, சிறு சிறு அறுவை சிகிச்சைகளை சந்திக்க வேண்டி வரும்.

ஜென்ம குரு என்பதால் யாரை நம்பியும் அவசரப்பட்டு சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். பொதுவாக புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. புது வீடு கட்ட லோன் கிடைக்கும். இதற்குமுன் பாதியில் நின்ற கட்டிடப்பணி முழுமையடையும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சுற்றத்தினர் மத்தியில் செல்வாக்கு பெருகும். குருவி சேர்ப்பதுபோலச் சேர்த்து அவசரத்திற்கு உதவலாம் என்று பணம் கொடுத்து ஏமாந்தீர்களே! அந்தப் பணம் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கைக்கு வரும். நீங்களும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஷேரில் அளவாக முதலீடு செய்யுங்கள்.

குரு உங்கள் ராசியில் நீச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் அவ்வப் போது வருங்காலம் பற்றிய கவலையும், தலைச் சுற்றல், செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை, எதையோ இழந்ததைப் போல ஒரு வெறுமையும் வந்து நீங்கும். வெளியுணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யப் பாருங்கள். மருந்து, உணவு, கெமிக்கல் மற்றும் நீசப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் ஏட்டிக்குப் போட்டியாக பேசினாலும் அனுசரித்துப் போங்கள். வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். அரசு சம்பந்தப் பட்ட விசயங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்யோகத்தில் எல்லாப் பணியையும் நீங்களே சுமந்து செய்யும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். பதவி உயர்வுக்காக பலமுறை தேர்வு எழுதி தோற்றீர்களே அடுத்த வருட மத்திய பகுதியில் தேர்வில் வெற்றி பெற்று பதவி உயர்வு பெறுவீர்கள். உயரதிகாரிகள் உங்கள் திறமையை பரிசோதிப்பார். எல்லா நேரத்திலும் விழிப்புணர்வோடு இருங்கள். முக்கிய கோப்புகளை வீட்டிற்கு எடுத்துவர வேண்டாம். சக ஊழியர்களுடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கன்னிபபெண்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கல்யாணப் பேச்சு வார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். ஆனால் கவனமாக கையாளுங்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். மாணவர்கள் தொலைக்காட்சி முன்னால் அதிக நேரம் உட்கார்ந்து நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நொறுக்குத்தீனியை குறையுங்கள். கணிதப் பாடத்தில் கவனம் தேவை.

கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கிசுகிசுத் தொல்லைகள் வரும். வருமானம் ஓரளவு உயரும்.
ஆகமொத்தம் இந்த குரு மாற்றம் புதிய சிந்தனைகளையும், நல்ல நண்பர்களையும் தருவதுடன் கடின உழைப்பால் இலக்கை எட்டிப்பிடிக்கவும் உதவும்.

பரிகாரம் :

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சாட்சிநாதேஸ்வரரையும், ஞான வடிவாய் விளங்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்