சாதி, மதம் பார்க்காமல் மனிதநேயத்துடன் அனைவருக்கும் உதவும் நீங்கள், பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி. இதுவரை உங்கள் ராசிக்கு 11ஆவது வீட்டில் இருந்த குரு பகவான் ஓரளவு நன்மை தந்தார். அர்த்தாஷ்டமச் சனியால் இருந்த பிரச்னையை குறைத்தார். தற்சமயம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் நுழைகிறார். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பழைய கடனை பைசல் செய்வதற்கு வழிவகைகள் பிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உடல்நிலை தேறும். வீடு, வாகனம் அமையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
ஆனால் மே, ஜூன், ஜூலை மாதங்களில் சிறு சிறு விபத்துக்கள், வேலைச் சுமை, செலவினங்கள், அலைச்சல், மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களுக்கு சாட்சிக் கையெழுத்து போடாமல், எதிலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
குரு பகவான் உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தாய் வழிச் சொத்துக்கள் வந்து சேரும். புது வாகனம் வாங்குவீர்கள். குரு ஆறாவது வீட்டையும், எட்டாவது வீட்டையும் பார்ப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைகள் அமையும். வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள். கவுரவப் பதவிகள் தேடிவரும்.
சொந்த ஊரிலுள்ள கோயிலை புதுப்பித்து ஊரே வியக்கும்படி கும்பாபிஷேகம் நடத்துவீர்கள். மகான்களின், சித்தர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை உண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு கிட்டும்.
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமார்தான். சில முக்கிய வேலைகளை நீங்களே செய்வது நல்லது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். வேற்று மாநிலத் தொடர்புடன் வியாபாரம் விரிவடையும். ஏற்றுமதி, இறக்குமதி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் முழு மூச்சுடன் இறங்கி, முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மேலதிகாரியிடம் உங்களால் பயனடைந்த சிலர் உங்களைப் பற்றி தவறாகக் கூறினாலும், அதையும் தாண்டி அதிகாரிகளின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். அலுவலக அந்தரங்க விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பதவி உயர்வு உண்டு. ஆனால், தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியது வரும்.
கன்னிப் பெண்கள் வருங்காலத்தை நினைத்து அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மாதவிடாய்க் கோளாறு, தலைச் சுற்றல் வந்து விலகும். தடைபட்ட கல்வியை மீண்டும் தொடருவீர்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மாணவர்கள் இனியும் அலட்சியமாக இருக்க வேண்டாம். எல்லா விடைகளும் நினைவில் இருப்பதுபோலத் தோன்றும்.
ஆனால், தேர்வறையில் பாதி விடைதான் நினைவுக்கு வரும். ஆகவே, பலமுறை விடைகளை எழுதிப் பாருங்கள். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வராமல் இழுபறியாக இருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். என்றாலும் சிறுசிறு கிசுகிசுத்தொல்லைகள் வந்துபோகும்.
இந்த குரு மாற்றம் அலைச்சலுடன் ஆதாயத்தையும், தொலை தூரப்பயணங்களையும், ஓரளவு வளர்ச்சியையும் தருவதாக அமையும்.
பரிகாரம் :
திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் வீற்றிற்கும் ஸ்ரீ அக்னீஸ்வரரையும், அங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் சுவாதி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.