2008 புத்தாண்டு பலன்கள் - ரிஷபம்!

சனி, 29 டிசம்பர் 2007 (19:01 IST)
தோல்வி கண்டு துவளாத நீங்கள் எப்போதும் வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். உற்றார், உறவினரும் வசதியாக வாழ வேண்டுமென நினைப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ய வீடான புதனின் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நிம்மதி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கோபம் குறையும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

உங்களின் பூர்வபுண்யாதிபதி புதன் சனியின் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பச் சூழ்நிலையை அனுசரித்துப் போவார்கள். வருடம் பிறக்கும் போது சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் நிற்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போதும் கவனம் தேவை. தந்தைக்கு சின்னதாக அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

09.04.2008லிருந்து கேது உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு வர இருப்பதால் அது முதல் மன உலைச்சல் குறையும். தடைபட்ட வேலைகள் முடியும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீடுவாங்குவது. விற்பதில் இருந்த தடைகள் நீங்கும். வீடு கட்டும் பணியில் இருந்த பாதுகாப்புகள் நீங்கி அரை குறையாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். கௌரவப் பதவிகள் வரும். தாம்பத்யத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டில் நின்றாலும் வருடப் பிறப்பின் போது சுகாதிபதி சூரியனுடன் நிற்பதால் அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உடனே முடியும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அதிகளவு முதலீடு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்த மோதல் விலகும்.

ஏப்ரல் மாதம் வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் மற்றவர்களிடம் பேசும் போது உணர்ச்சி வசப்பட வேண்டாம். உங்களை சீண்டிவிட்டு சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். பார்வைக் கோளாறு, பல்வலி, ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். யாரிடமும் சவால் விட்டுப் பேச வேண்டாம். சகோதர சகோதரி வகையில் கொஞ்சம் கலகலப்பு வரும். நீங்கள் மாறிவிட்டதாக சொல்வார்கள். அனுசரித்துப் போங்கள். வருடத்தின் பிற்பகுதியில் வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ், கௌரவம் உயரும். உங்களுக்கு எதிராகப் பேசியவர்களின் மனசு மாறும். உங்கள் மகளுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தையில் இருந்த இழுபறி நிலை மாறும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பரபரப்பாக இருக்கும். ஆனால் உங்களிடம் வேலை பார்த்தவர்கள் பக்கத்துலேயே கடை திறந்து கொஞ்சம் போட்டியை உண்டாக்குவார்கள். ஜுன் மாதத்தில் பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பாக்கிகள் ஜூலை மாதத்தில் வசூலாகும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களின் அறிவுத்திறமையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்ப்பீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் சச்சரவு வரும். தலைமை அதிகாரி பாராட்டினாலும் உங்களுக்கு நேர் உயர் அதிகாரி கொஞ்சம் சிடுசிடுவென பேசுவார். வருடக் கடைசியில் சம்பளம், பதவி உயரும். ஜுன் மாதத்தில் புது வாய்ப்புகள் வரும்.

கன்னிப்பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வயிற்றுவலி, மாதவிடாய் போக்கு ஒழுங்கின்மை வந்து நீங்கும். உயர்கல்வியில் தேர்ச்சி பெறுவீர்கள். வேலை கிடைக்கும். ஆனால் சுமாரான நிலவரத்தில் தான் கிடைக்கும். மாணவ, மாணவிகள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல மதிப்பெண் பெறலாம். வகுப்பறையில் அரட்டை அடிக்க வேண்டாம். விடைகளை எழுதிப் பாருங்கள். விளையாட்டின் போது கவனம் தேவை. கலைஞர்களின் திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம் :

தஞ்சையில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரரையும், நந்திதேவரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்