2008 புத்தாண்டு பலன்கள் - கன்னி!

சனி, 29 டிசம்பர் 2007 (18:52 IST)
எல்லோர் மீதும் பூரண அன்பு காட்டும் நீங்கள் யார் சொத்துக்கும் ஆசைப்பட மாட்டீர்கள். முடிவெடுத்து விட்டால் வருடங்கள் கடந்தாலும் மனம் மாறாமல் விடா முயற்சியுடன் எதையும் செய்து முடிப்பீர்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறப்பதாலும் உங்கள் ராசிநாதன் பூர்வபுண்ய வீட்டில் நிற்பதாலும் முடங்கிக் கிடந்த முணுமுணுத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி உற்சாகத்துடன் வேலை பார்க்கத் தொடங்குவீர்கள். சோகமாக இருந்த உங்கள் முகத்தில் இனி ஒரு வித புன்னகை அரும்பும். கால்வலி, தலைவலி எல்லாம் குறையும். இனி இயற்கை உணவு மூலம் உடம்பு சீராகும்.

சுக்கிரன் மூன்றில் மறைந்து நிற்பதால் வரவேண்டிய பணம் வரும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கணவன் மனைவிக்குள் நேரடியாக சண்டை வராவிட்டாலும் உங்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்களால் உங்களுக்குள் கருத்துமோதல் வளரும்.முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுவது நல்லது. வாகனத்தை இயக்கும் போது செல்போனில் பேச வேண்டாம். யாருக்காகவும் கூட இருந்து பணம் வாங்கித் தர வேண்டாம். சாட்சிக் கையெழுத்தும் போட வேண்டாம்.

உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் செவ்வாய் நிற்கும் போது இந்த வருடம் பிறப்பதால் எதிர்பாராத உதவிகள் சகோதர சகோதரி மூலம் கிடைக்கும். நீண்ட நாள் சொத்துப் பிரச்சனை, வழக்குகளெல்லாம் நல்ல முடிவுக்கு வரும். ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வீண் செலவுகளும், அலைச்சல்களும், திடீர்ப் பயணங்களும், சகோதர வகையில் மனத்தாங்கல்களும் வந்து நீங்கும். செப்டம்பர் மாதத்தில் நெஞ்சுவலி, மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி வந்து நீங்கும். டிசம்பர் மாதத்தில் எதிர்பாராத பண வரவு உண்டு. உடல் நலமும் நன்றாக இருக்கும். இந்த வருடத்தில் 9.4.08லிருந்து கேது லாப வீட்டில் உரைவதால் அதுமுதல் கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். விரக்தி நீங்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். பிரபலங்களால் பாராட்டப் படுவீர்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து ராகுவின் போக்கு கொஞ்சம் மாறுவதால் பிள்ளைகளிடம் பாசமாகப் பழகுங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்களிடம் நேரம் ஒதுக்கிப் பேசுங்கள். மகனுக்கு தாமதமாக வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும் என்றாலும் நீங்கள் விசாரித்துப் பார்த்து முடிவெடுப்பது நல்லது.


வியாபாரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பற்று வரவு உயரும். புரோக்கரேஜ், ஏஜென்சி வகைகள் லாபம் தரும். மே, ஜீன் மாதங்களில் எதிர்ப்பாராத புது ஒப்பந்தங்கள், புதுத் தொடர்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். டிசம்பர் மாதத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை அதிகாரி ஏற்பார். ஊழியர்கள் மறைமுகமாக உங்களை எதிர்ப்பார்கள். சில சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் பாராட்டுக் கிடைக்கும்.

வேற்று மதத்தினர், நாட்டினர் உதவுவார்கள். மே, ஜுன் மாதத்தில் அதிகாரிப் பதவியில் அமர்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். வேலையில் அமர்வார்கள். பெற்றோருக்கு உதவுவீர்கள். மாணவ, மாணவிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களை நம்பி எந்தத் தப்புக் காரியங்களையும் செய்ய வேண்டாம். கலைஞர்களுக்கு வரவேண்டிய சம்பளம் கைக்கு வந்துசேரும்.

பரிகாரம் :

திருச்செந்தூர் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை சஷ்டி திதியில் சென்று கந்தசஷ்டி பாடி வணங்குங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்