2008 புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்!

சனி, 29 டிசம்பர் 2007 (18:54 IST)
ஏட்டறிவுடன், பட்டறிவும் உள்ளவர்களே! எதிராளிகளையும் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைப்பவர்களே! செயற்கரிய செயல்களை செய்து முடித்தாலும் சிம்மாசனத்தை விரும்பாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீடான 11 ஆம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவகையிலும் வெற்றியே கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஒருவரை ஒருவர் இனி புரிந்து கொள்வீர்கள்.

வருடம் பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மனைவிக்கு உடல்நிலை சீராகும். சேமித்து வைத்த பணத்தில் சொந்த வீடு வாங்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆகஸ்ட் வரை பலவீனமாக இருப்பதால் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுங்கள். வயிற்றுவலி, மூட்டுவலி வந்து நீங்கும். சகோதர வகையில் மனக்கசப்புகள், சின்ன சின்ன ஏமாற்றங்களும் வந்து போகும். பிள்ளைப் பாக்கியம் உடனே கிடைக்கும். உங்கள் மகனின் போக்கில் நல்ல மாற்றம் உண்டு.

மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு வலுவாக இருப்பதால் சொந்த ஊரில் மதிப்பு கூடும். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வழிய வந்து பேசுவார்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். கேது பலமாக இருப்பதால் உடல் நலம் சீராகும். தோல் நோய் நீங்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவு படுத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அயல்நாடு பயணம் சென்று வருவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். அனுபவம் மிக்க நல்ல வேலையாட்களெல்லாம் வந்துசேருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

உணவு, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சம்பளம் கூடும். கன்னிப் பெண்களுக்கு காதல் இனிக்கும். உயர் கல்வி பெறுவதில் இருந்த தடை நீங்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. மாணவ, மாணவிகளுக்கு இனி மறதி நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள். கலைஞர்களுக்கு அரசு விருது கிடைக்கும்.

பரிகாரம் :

கோவைக்கு அருகிலுள்ள மருதமலை முருகனையும், பாம்பாட்டி சித்தரையும் சென்று வழிபடுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்