2008 புத்தாண்டு பலன்கள் - தனுசு!

சனி, 29 டிசம்பர் 2007 (18:54 IST)
தடைகள் வந்தாலும் தடம் மாறாதவர்களே! தண்டிக்கும் அதிகாரம் இருந்தும் மன்னிப்பவர்களே! சுய நலமே இல்லாமல் உதவுபவர்களே! நாட்டு நடப்பை உன்னிப்பாகக் கவனிப்பவர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு பத்தாவது ராசியில் பிறப்பதால் எங்கும், எதிலும் உங்கள் புகழ் பரவும். உங்கள் ராசிக்குள்ளேயே குருவும், சூரியனும் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு தொடங்குவதால் உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். லேசாக தலை சுற்றல், நெஞ்சு வலி வந்துபோகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டு.

01.05.08லிருந்து 23.06.08 வரை செவ்வாயும், கேதுவும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் அமர்வதால் சிறுசிறு விபத்து, சச்சரவு, அலைச்சல் வந்து செல்லும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிள்ளைகளின் உடல் நிலையில் அதிகக் கவனம் செலுத்துங்கள். அவர்கள் புது நண்பர்களால் தடுமாறவும் வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்கு வர இருப்பதால் பல், காது, தொண்டை வலி வந்து நீங்கும்.

உங்களின் பூர்வபுண்யாதிபதி செவ்வாய் ஏப்ரல் மாதம் வரை உங்கள் ராசிநாதனான குருவின் பார்வையை பெற்றிருப்பதால் எதிர்பாராத பண வரவு, வீடு, மனை வாங்குவது, பிள்ளைகளால் பெருமை, ஷேர் மூலம் பணம் வருவது, அரசால் நன்மை என நல்ல பலன்கள் உண்டாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள். யோகா, தியானப் பயிற்சிகள் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது உடற்பயிற்சிகளும் செய்வது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அரை குறையாக இருந்த வீடு கட்டும் வேலை முழுமையடையும். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றி இருந்த வீண் பழி விலகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களின் ஆலோசனைகளை அனவைரும் ஏற்றுக் கொள்வார்கள். அரிமாசங்கம், சத் சங்கம், ஆன்மீக இயக்கங்களில் கௌரவப் பதவி தேடி வரும்.

வியாபாரத்தில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கும். ஏப்ரல் மாதம் வரை விறுவிறுப்பு அதிகமிருக்கும். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி வகைகள் ஆதாயம் தரும். உணவு, ரசாயனம், டிராவல்ஸ், கன்சல்டிங் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் கூடும்.உத்யோகத்தில் உங்களின் அருமைப் பெருமையை அதிகாரி உணர்ந்தாலும் சக ஊழியர்களுடன் கொஞ்சம் மோதல் இருக்கும். முடிந்த வரை விவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

கன்னிப் பெண்ளுக்கு பொது அறிவுத்திறன் வளரும். முக்கியமுடிவுகளை நீங்களே எடுப்பீர்கள். காதல் விஷயத்தில் கவனமாக இருங்கள். வேலை பார்த்துக்கொண்டே மேல் படிப்பு படிப்பீர்கள். மாணவ, மாணவியர்களுக்கு அறிவாற்றல் பெருகும். படிப்பில் அக்கறைக் காட்டுவார்கள். இசை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

பரிகாரம் :

பழனிமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணியையும், போகரையும் சென்று வணங்குங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்