2008 புத்தாண்டு பொது‌ப்பலன்

புதன், 26 டிசம்பர் 2007 (18:29 IST)
1.1.2008 = 1=3

webdunia photoWD
அதிரடி மாற்றங்களுக்கும், அரசியலுக்கும், ஆத்ம ஞான ஆன்மீகத்திற்கும் புரட்சிக்கும் அதிபதியாக விளங்கும் சூரியனின் ஒன்றாம் எண்ணை பிறவியாகக் கொண்டும், நியாயத்திற்கும், ஜனநாயகத்திற்கும், செல்வத்துக்கும், பக்திக்கும் அதிபதியான குருவின் எண்ணான மூன்றாம் எண்ணை விதியாகக் கொண்டும் இந்த 2008ம் ஆண்டு பிறக்கிறது.

ஜோதிட சாஸ்திரப்படி அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி, கன்னி லக்னத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கின்றது.

அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்!

மக்களின் அடிப்படை உரிமைகள் இதுவரை எங்கெல்லாம் பறிக்கப்பட்டதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும். உலகெங்கும் ஆளுபவர்களுக்கு எதிரான முழக்கங்கள் அதிகரிக்கும். பெரும்பான்மையாக வசிக்கும் மக்களை சிறுபான்மையாக இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். அரசியலில் பழி வாங்கும் போக்கு அதிகரிக்கும். 09.04.2008 அன்று ராகுவும், கேதுவும் இடம் மாற இருப்பதால் இந்திய அரசியலில் அதிசயிக்கத் தக்க மாற்றங்கள் வரும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கூட்டணிகள் மாறும். தேர்தல் வரும்.

மழைக்கோளான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நிச்சயம் மழை பொழியும். ஆனால் பருவ நிலை மாறி (2007 போலவே) பொழியும். விவசாயத்தில் கிராம மக்களுக்கு ஈடுபாடு குறையும். விவசாயிகளை ஊக்கப்படுத்த புதுத் திட்டங்கள் அறிமுகமாகும். நாட்டின் சிறு தொழில் பாதிக்கும். பணம் படைத்தவர்களின் சூழ்ச்சி வலையில் பாமர மக்கள் சிக்குவார்கள்.

சுக்ரன் வக்ரமின்றிக் காணப்படுவதால் பெண்கள் கை ஓங்கும். அரசியலில் பெண் தலைவர்கள் ஒன்று சேர்ந்து சில மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். பாலியல் கொடுமை, பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும், மறுபக்கம் சாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தங்களுக்கு எதிரான அடக்கு முறையை எதிர்த்து கிளர்ந்தெழுவார்கள். படிப்பில் மாணவிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். அயல்நாடு சென்று உயர்கல்வி, வேலை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும்.

தலைமை மாற்றம் ஏற்படும்!

webdunia photoWD
வருடப் பிறப்பின்போது குரு ஆட்சி பெற்றிருப்பதால் ஆண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். மக்களிடையே சேமிக்கும் குணம் பரவலாகும். தங்கம் விலை உயராது. கட்டுப்பாடுக்குள் இருக்கும். செப்டம்பர் மாதத்திலிருந்து பூமி விலை மீண்டும் உயரும். சிமெண்ட் விலை கொஞ்சம் குறையும். செவ்வாய் கிரகம் தொடர்ந்து பலவீனமாக இருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குழப்பம், கலவரம் அதிகரிக்கும், கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமாகி, பிறுகு அக்டோபர் மாதத்திலிருந்து வலுவடையும். சாலை விபத்துகள் அதிகரிக்கும். தமிழகத்தில் இளைஞர்கள், புதியவர்களின் கூட்டணியால் அரசியலில் மாற்றம் வரும். ஆளுங்கட்சி விமர்சனங்கள் அதிகரிக்கும்.

webdunia photoWD
கர்நாடகாவில் ஏமாற்றப்பட்டவர்கள் ஆட்சியில் அமர்வர். தமிழகத்தில் தலைமை மாற்றம் ஏற்படும். ஏப்ரலில் இருந்து ஜூன் மாதத்திற்க்குள் தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பார்.

13.02.08 - 13.03.08, 01.05.08 - 23.06.08, 24.06.08 - 16.08.08, 17.09.08 - 07.11.08 வரை உள்ள காலக் கட்டங்களில் வன்முறை, மதக்கலவரங்கள், இயற்கை சீற்றம், தலைவர்கள் மரணம், விபத்துகள், தீவிரவாதிகளின் தாக்குதல்கள், நிலநடுக்கம், ஆட்சிக் கவிழ்ப்பு ஆகியன நிகழக் கூடும்.

மாணவர்களிடையே வக்ர புத்தி பரவும்!

ஆன்மீக கிரகங்கள் வலுவாக இருப்பதால் ஆன்மீகவாதிகள் புகழடைவார்கள். யோகா, தியானம், ஆங்கிலம் சொல்லித் தருபவர்கள் அதிகம் சம்பாதிப்பார்கள். சனி பகை வீட்டில் நிற்பதால் புராதனச் சின்னங்கள் கொள்ளை அடிக்கப்படும். நூதனத் திருடர்கள் அதிகரிப்பர். வேலைச் சுமையால் மன இறுக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கூடும். கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறையும். கல்வித்துறை நவீனமாகும்.

வாகனங்கள், மின்னணு, மின்சார சாதனங்களின் விலை குறையும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச வருமானம் கூடும். கரும்பு, நெல் விலை உயரும். அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். புது சலுகைகளையும் பெறுவார்கள். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வக்ர புத்தி பரவும். பங்குச் சந்தையில் இருந்த ஏற்ற, இறக்கம் மாறி நிலையான சூழல் நிலவும்.

அருணாச்சலப்பிரதேசம், குஜராத் மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். பெட்ரோல், டீசல் விலை உயரும். கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும். கடல் மாசு அதிகரிக்கும். வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும். தனியார் முதலீடுகள் அதிகரிக்கும். ராணுவத் துறை நவீனமாகும். சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கும். புது செயற்கைக் கோள்களை இந்தியா ஏவும்.

இந்தப் புத்தாண்டு கடந்த ஆண்டை விட மக்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியைத் தருவதாகவும், திட்டமிட்டு செயல்படும் குணத்தையும் உழைக்கும் எண்ணத்தையும் அதிகமாக்கும்.

பரிகாரம்:

(பனிரெண்டு ராசிக்காரர்களும் நல்ல பலன்களை அடைவதற்கு)

webdunia photoWD
பக்திக்கும் முக்திக்கும் உரிய கிரகமான குருவின் விதி எண்ணில் இந்த ஆண்டு பிறப்பதாலும், கல்வி, வேள்விகளுக்கும், விடாமுயற்சிக்கும் உரிய கிரகமான புதனின் கன்னி ராசியில் இந்த வருடம் பிறப்பதாலும் பண வசதி இல்லாமல் படிப்பை பாதியில் விட்ட ஏழைப் பிள்ளைகளின் கண்ணீரைத் துடைக்க ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். ஸ்ரீசரபேஸ்வரனை வணங்குங்கள்.