தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்றில்லாமல் தாய்நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் தீராத காதல் கொண்டிருப்பவர்களே. எதிர்பார்ப்பு இல்லாமல் எதிரிக்கும் உதவும் பெருந்தன்மையாளர்களே, ஒரு நிமிட நேரத்திலேயே ஒருவரின் உள்மனதில் புகுந்து அவரின் சுயரூபத்தை அறியும் ஆற்றல் உள்ளவர்களே, வாழ்வில் ஏற்ற இறக்கம் வந்தபோதும் மாறாத புன்னகையால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் கவருபவர்களே...
இதுவரை உங்கள் ராசிக்கு விரைய வீட்டில் அமர்ந்து நிறைய செலவுகளை தந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைகிறார். ஜென்ம குருவாச்சே! என அஞ்ச வேண்டாம். நீங்கள் குருவின் ராசியில் பிறந்திருப்பதாலும், குரு தன் சொந்த வீட்டிற்கு வருவதாலும், இந்த குரு மாற்றத்தால் உங்களுக்கு நல்லதே நடக்கும். கெடுபலன்கள் குறையும்.
எந்த ஒரு வேலையையும் உங்களால் முழுமையாக முடிக்க முடியாது என்பதுபோல ஏளனமாக பார்த்தார்களே!அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இனி அதிரடியாக செயல்படுவீர்கள்.ஆனால் கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். அடிக்கடி வாக்குவாதங்களும் வந்து நீங்கும். மனைவிக்கு மருத்துவச் செலவு உண்டு. மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்துநீங்கும். பிள்ளைகள் கூட உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசினார்களே, இனி உங்கள் ராசியில் வந்தமரக்கூடிய குருபகவான் பிள்ளைகள் ஸ்தானத்தை 5ஆம் பார்வையால் பார்க்க இருப்பதால் பணிவாக நடந்துகொள்வார்கள். உங்களின் மகளுக்கு ஊரே மெச்சும்படி கல்யாணம் நடத்த வேண்டுமென நினைத்திருந்தீர்களே,அது இனி நிஜமாகும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
உடன் பிறந்தவர்களால் இருந்துவந்த மன உளைச்சல் நீங்கும். இனி சகோதர வகையில் உதவி கிடைக்கும். உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்வார்கள். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த பிரச்சனைகளெல்லாம் இனி விலகும்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். கன்னிப் பெண்கள் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். காதல் விவகாரங்களில் கவனமாக இருங்கள். உயர்கல்வியில் ஆர்வம் காட்டுங்கள். பெற்றோரின் மனசு புண்படும்படி பேச வேண்டாம். உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் தலைசுற்றல், பசியின்மை, முன்கோபம், முதுகுவலி, சோம்பல் வந்து நீங்கும் .மருத்துவரின் ஆலோசனையில்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பெரிய பெரிய நோய்கள் இருப்பது போன்ற பிரம்மை இருக்கும். பயந்து விடவேண்டாம். மெடிக்ளெய்ம் எடுத்துக் கொள்ளுங்கள். டிரஸ்ட், சங்கம் தொடங்குவீர்கள். சமூக நலப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சாதுக்கள், சன்னியாசிகளின் தொடர்பு கிடைக்கும்.
பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். வேற்று மதத்தினர், நாட்டினரால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். மாணவர்கள் இனியும் அரட்டையடித்துக் கொண்டிருக்காமல் படிப்பில் கவனம் செலுத்தப்பாருங்கள். கணிதம்,அறிவியல் பாடத்தில் கூடுதல் கவனம் தேவை.
வியாபாரத்தில் கொஞ்சம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில மாற்றகளை ஏற்படுத்துவீர்கள். வேலையாட்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். பலநாட்களாக வராமலிருந்த பழைய பாக்கிகளை இனி விரைந்து வசூலிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களை அறிமுகம் செய்வீர்கள். உணவு, இரும்பு, ரியல் எஸ்டேட் மற்றும் நீசப் பொருட்களால் கணிசமான லாபம் கிடைக்கும்.
உத்யோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள்.எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு போராட்டதிற்குப் பின்பு கிடைக்கும்.கணினி துறையிலிருப்பவர்களுக்கு சம்பளம் உயரும். அயல்நாடு சென்று வருவீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கிசுகிசுத் தொல்லைகள் வரும். மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம்.
இந்த குருமாற்றம் கூடுதலாக உங்களை உழைக்க வைப்பதுடன் வாழ்க்கையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நெளிவு,சுளிவுகளை கற்றுத்தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் தென்குடித் திட்டையில் கௌதமர், ஆதிஷேடன், காமதேனு ஆகியோருக்கு காட்சியளித்த அருள்மிகு பசுபதிநாதரை வணங்கி, ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் வணங்குங்கள். குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.