துலாம் ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள்

புதன், 14 நவம்பர் 2007 (12:29 IST)
webdunia photoWD
அடுக்கடுக்காக தோல்வி வந்தாலும் அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டும் வேங்கைகளே, தளராத தன்னம்பிக்கையால் தடைக் கற்களை படிக்கட்டுக்களாக்கி பயணிப்பவர்களே, சுய ஒழுக்கத்துடன் சுதந்திர மனப்பான்மையுடைய நீங்கள், என்றும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்வீர்கள். மல்லிகைப் பூ சிரிப்பால் மற்றவர்களின் மனம் கவரும் நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டீர்கள்.

உங்களது தன வீட்டில் நிற்கும் குரு பகவான், 16.11.2007 முதல் 30.11.2008 வரை 3வது வீட்டில் அமரப் போகிறார். இதுவரை உங்களுக்கு பண வரவையும், குடும்ப மகிழ்ச்சியையும் வழங்கினார். இவர், 3வது வீட்டுக்கு வருவதால், நல்லதே நடக்கும். குரு, உங்கள் மனைவியின் ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவற்றை கருணையுடன் பார்ப்பதால் வெற்றிகள் தொடரும். தெளிவாக, தீர்க்கமாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் அமைதி தவழும். உறவினர் மற்றும் நண்பர்களால் கணவன், மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் எழும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் வரும். சொத்து விவகாரத்தில் கவனம் தேவை.

பிள்ளைகள் பாசமாக இருப்பார்கள். அவர்களின் உடல் நலம் சீராகும். வேலை கிடைத்து சம்பாதிக்கத் தொடங்குவார்கள். வெளிநாட்டுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு அமையும். விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்களுக்குப் பழுது ஏற்படலாம்.

கன்னிப் பெண்களுக்கு புது முயற்சிகள் வெற்றி அடையும். புது நண்பர்கள் அறிமுகமாவர். மற்றவர்களது வார்த்தையை அப்படியே நம்ப வேண்டாம்.கல்யாணத்திலிருந்த தடைகள் விலகும். பிரபலங்களது நட்பு கிட்டும். பதவிகள் தேடி வரும். சவாலான, பிரச்சனைக்கு உரிய பதவிகளைத் தவிருங்கள். புத்திசாலித்தனமும் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். கண் வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியன விலகும். பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். கனவுத் தொல்லை மற்றும் தூக்கம் இன்மை ஆகியவற்றால் சோர்வாகக் காணப்படுவீர்கள். மாணவ, மாணவியர்களின் அறிவுத் திறன் மற்றும் கேள்வி கேட்கும் ஆற்றல் கூடும். உயர் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். சக மாணவர்கள் உதவுவர். விளையாட்டில் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

வியாபாரம் சூடு பிடிக்கும். பற்று, வரவு உயரும். போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களால் சிறு பிரச்னைகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கடனுதவி கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய பங்குதாரர்களிடம் எச்சரிக்கை தேவை. கூடுமானவரை கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. புரோக்கரேஜ், கம்ப்யூட்டர், உணவு வகைகள் மற்றும் வாகனத்தால் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பர். சக ஊழியர்களால் சிறு பிரச்னைகள் வந்து போகும். வேலைச்சுமை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளுடன் உரையாடும்போது நிதானம் தேவை. திடீர் இடமாற்றம் வரும். சில அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிவரும். பதவி உயர்வுக்கு முயல்வீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் பணிபுரிய வேண்டி வரும். கலைஞர்களுக்கு பழைய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.

இந்தக் குருப் பெயர்ச்சி, உங்களுக்குச் செலவுகளையும், காரிய தாமதத்தையும் தந்தாலும், மறு புறம் வளர்ச்சியையும், செல்வாக்கையும் தரும்.

பரிகரம்: விருத்தாசலம் அருகில், லிங்க வடிவில் அருள் பாலிக்கும் முருகப்பெருமானான ஸ்ரீகொளஞ்சியப்பரை புனர்பூசம் நட்சத்திர தினத்தன்று சென்று வணங்குங்கள். பசுவுக்கு பழம் கொடுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்