சிம்ம ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள்:

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (12:30 IST)
webdunia photoWD
புன்சிரிப்பால் அனைவரையும் கவருபவர்களே, ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மதி நுட்பமுள்ளவர்களே, தும்பைப் பூப்போல பளிச்சென உடுத்தும்,உங்களின் மனசும் கூட வெள்ளைதான். அடக்குமுறை, ஆணவம் இவற்றிற்கெல்லாம் அடிபணியாத நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். எல்லோரிடமும் மனம்விட்டுப் பேசும் நீங்கள், மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் ஒருபோதும் தலையிட மாட்டீர்கள். புரட்சியையும்,புதுமையையும் விரும்பும் நீங்கள், பெரியோரை மதிக்கத் தவரமாட்டீர்கள்.

யார் வந்து கேட்டாலும், எப்போது கேட்டாலும், எதைக் கேட்டாலும் வாரி வழங்கி வள்ளலாகிய மாமன்னன், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தவனான கர்ணனை உலகுக்குத் தந்த சூரிய பகவானின் ராசியில் உதித்தவர்களே! மாதா, பிதா, குரு, தெய்வத்தை மதிப்பவர்களே! உதிரத்தையும், உணர்ச்சியையும் பொங்க வைக்கும் கிரகமான செவ்வாயை யோகாதிபதியாக கொண்ட நீங்கள், வீரமுடன் விவேகமும் உள்ளவர்கள். மாளிகையில் வாழ்ந்தாலும் மண்குடிசையில் இருப்பவர்களுக்காக மன்றாடுவீர்கள். ஏட்டறிவு, எழுத்தறிவுடன், அனுபவ அறிவும் அதிகமுள்ளவர்களே! செயற்கரிய செயல்களைச் செய்து முடித்தப் பின்பும் நிறைகுடம் ததும்பாதவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து தூண்டில் மீனாய் பலவகையிலும் துடிக்க வைத்து துன்புறுத்திய குரு பகவான், வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கும் அற்புத வீடான ஐந்தாம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடத்தில் குரு கெஞ்சினாலும் கிடைக்காது என்ற அனுபவ மொழிக்கேற்ப அனைத்து வசதிகளையும் அள்ளித் தரப்போகிறார்.

குடும்பமே இரண்டாகிக் கிடந்ததே, எங்குபோனாலும் தோற்றுப்போய் திரும்பி வந்தீர்களே, பைசாகூட கையில் தங்காமல் வந்ததையெல்லாம் தந்துவிட்டு திண்டாடினீர்களே! கால்வலி, முதுகுவலி, நெஞ்சுவலி என்று வயதானவர்களைப் போல் துவண்டு துவண்டு படுத்தீர்களே! கால் உடைந்தும், கை உடைந்தும், மனம் உடையாமல் இருந்தீர்களே, வீட்டில் குடும்பத்துடன் இருந்தாலும் தனியாளாகத்தானே வாழ்ந்தீர்கள். உறவினர்களில் சிலர் உதாசீனப்படுத்தினார்களே, ஊமையன் கண்ட கனவுபோல எதையும் வெளியே சொல்ல முடியாமல் விக்கித் தவித்தீர்களே! இந்த நிலை மாறும்.

உங்களின் பூர்வபுண்ணியாதிபதியான குரு பகவான் ஆட்சிப்பெற்று அமர்வதால் நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். நீங்களும் ஆள்வீர்கள். குரு உங்கள் ராசியை பார்ப்பதால் சுருங்கிய முகம் மல்லிகை போல் மலரும். குன்றிய தோள்கள் நிமிரும். பார்வைக் கோளாறு நீங்கும். ராசிக்கு 9ஆம் வீட்டை ஐந்தாம் பார்வையால் குரு பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த தகராறு நீங்கும். அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் குறையும், அவரின் உடல் நிலை சீராகும். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரியுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். வடதுருவம் தென்துருவமாக இருந்து வந்த கணவன் - மனைவிக்குள் இனி ஒற்றுமை பலப்படும். குடும்ப வருமானம் உயரும்.

பிள்ளைகளுக்காக அதிகநேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். நீண்டகால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள்.

வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கனவுத்தொல்லை, மாதவிடாய்க் கோளாறு நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கைக்குரியவர்களாவீர்கள். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் விளையாட்டு, விளையாட்டு என்று படிப்பில் கோட்டை விட்ட நிலை இனி மாறும். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் கல்வியில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப் பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர் தேடி வருவார்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்திலஉங்கள் சேவையை எல்லோரும் மதிப்பார்கள். பதவி உயரும். எதிர்த்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கலைஞர்களுக்கு அவ்வப்போது வந்த வீண் வதந்திகளும், அவப்பெயர்களும் மாறும். உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். அரசால் கவுரவிக்கப்படுவீர்கள்.

ஆகமொத்தம் இந்த குரு மாற்றம் ஒடுங்கி ஓரமாக நின்றுகொண்டிருந்த உங்களை, கோபுரத்தில் உட்கார வைப்பதுடன், பணபலத்தையும், மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ நக்கீரராலும்,அருணகிநாதராலும் பாடப்பெற்ற,குருபகவானால் பூசித்து வணங்கப்பெற்ற, ஸ்ரீ ஆதி சங்கரரின் காசநோயை நீக்கிய ஸ்ரீதிருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை விசாகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்க்கு உதவுங்கள். வளம் பெருகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்