கடக ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள்

புதன், 14 நவம்பர் 2007 (12:31 IST)
webdunia photoWD
கொள்கைக் கோட்பாடுகளில் விட்டுக் கொடுக்காத நீங்கள், சிறந்த பொதுவுடமைவாதிகள். சுற்றுப்புற சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசித புத்தியுடன் வாழ்க்கை சதுரங்கத்தில் சாதுர்யமாக காய்களை நகர்த்தும் ராஜதந்திரிகளும் நீங்கள்தான். திரவ உணவுகளை விரும்பி சுவைக்கும் நீங்கள், கலைகளை காதலித்துக் கொண்டே இருப்பீர்கள்.

குரு பகவான் உங்களது ராசிக்கு பாக்யாதிபதியாகவும் இருப்பதால், கெடு பலன்களது கடுமை குறையும். உயர் கல்வி மற்றும் உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரும். அவர்களது வருங்காலத்துக்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். குரு பகவான், தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், கேட்ட இடத்தில் பணமும், தக்க நேரத்தில் பிரபலங்களது உதவியும் கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புது வீடு வாங்குவீர்கள். வங்கியிலிருந்து எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் சிலவற்றை தைரியமாக எடுப்பீர்கள். கன்னிப் பெண்கள் அலட்சியப் போக்கை கைவிடுவது நல்லது. பெரிய விஷயங்களில் மற்றவர்களை நம்பி முடிவெடுக்க வேண்டாம். பெற்றோரது ஆலோசனைகளை ஏற்பது நல்லது. வேலை கிடைக்கும். அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். அரசு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். சில பதவிகள் வலிய வந்தடையும். அந்தரங்க விஷயங்களை வெளியில் பேச வேண்டாம். பழைய நண்பர்களை கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள்; தாமாகத் தேடி வருவார்கள். உங்களது வளர்ச்சி கண்டு உறவினர்கள் வியப்படைவார்கள். சகோதரி உதவுவார்; சகோதரரிடம் கொஞ்சம் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

மாணவ, மாணவியர் விடைகளை எழுதிப் பார்த்துப் படிப்பது நல்லது. மறதி, மந்தம் வந்து செல்லும். தவறுகளைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர்கள் மீது வருத்தம் வேண்டாம். கெட்ட நண்பர்களைத் தவிர்த்திடுங்கள்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். முக்கியமான, பெரிய ஆர்டர்களைப் பிடிப்பீர்கள். காண்ட்ராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு, கைவிட்டுப் போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். வேலையாட்கள் பொறுப்பாக நடப்பர். பங்குதாரர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உண்டு. எனவே, ஆவணங்களில் கையெழுத்திடுமுன் சட்ட ஆலோசகர்களைச் சந்தியுங்கள்.

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியில் விவாதிக்காதீர்கள். சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். வேலைச் சுமை அதிகரிக்கும். புது வாய்ப்புகள் வரும்; யோசித்து ஏற்கவும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்கள் மூலம் பயனடைவீர்கள். உயரதிகாரிகளுடன் பனிப்போர் ஏற்படலாம்.

கலைஞர்களைத் தேடி கிசுகிசுத் தொல்லைகள் வரும். எச்சரிக்கை தேவை. புது வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளை போராடி நிறைவேற்றுவீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி, புது அனுபவங்களையும், அலைச்சலுடன் கூடிய ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகரம்: மாமல்லபுரம் அருகில் உள்ள திருப்போரூர் சென்று ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளையும், அவரால் ஸ்தாபிக்கப்பட்ட சக்கரங்களையும், சஷ்டி திதி நாட்களில் வணங்குங்கள். மஞ்சள் ஆடையை தானம் கொடுங்கள். வெற்றி கிட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்