மேஷம் ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள் :

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (12:33 IST)
webdunia photoWD
எங்கும் எதிலும் புரட்சிகரமாக முடிவெடுப்பவர்களே, முதல் முயற்சியிலேயே காரியத்தை முடிக்கும் ஆற்றலுடையவர்களே, சுட சுட சாப்பிடும் நீங்கள் பசி பொறுக்க மாட்டீர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் செய்யும் தவறுகளை தயங்காமல் தட்டிக் கேட்பவர்களே, வீட்டு நலனுடன் நாட்டின் முன்னேற்றம் குறித்தும் அதிகம் யோசிப்பவர்களே, தானம் செய்ய தயங்காத நீங்கள், பாத்திரம் அறிந்து வாரி வழங்குவதில் வல்லவர்கள். முன்கோபமுடைய நீங்கள் சிறந்த குணவான்களாகவும் திகழ்வீர்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு எட்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஆட்டிப் படைத்த குரு பகவான் 16.11.2007 முதல் 30.11.2008 முடிய ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து உங்கள் வாழ்வில் திடீர் திருப்பங்களையும் செல்வ வளங்களையும் வாரி வழங்க உள்ளார். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். உங்கள் வார்த்தையை அனைவரும் மதிப்பார்கள்.

கணவன்-மனைவிக்குள் நிலவிய சண்டை சச்சரவுகள், சந்தேகங்கள் தீரும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாத குணம் இனி மாறும். உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உங்கள் மகளுக்கு பலவரன்கள் வந்தும் கல்யாணம் முடியவில்லையே என அவ்வப்போது வருந்தினீர்களே, இனி நல்ல இடத்தில் திருமணம் முடியும். மகனின் அடிமனதில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். அவர்களின் நட்பை பயன்படுத்தி பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட திருமணம் கூடி வரும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உயர் கல்வியில் நாட்டமில்லாமல் இருந்தீர்களே, இனி வெற்றி பெற்று, நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். இவ்வளவு காலம் தான் வாடகை வீட்டில் இருந்தாச்சு, இனிமேலாவது நமக்குன்னு சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவோம் என நினைத்தீர்களே, அந்த எண்ணம் இனி நிறைவேறும்.

பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள், மனக் கசப்புகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறி, ஏகப்பட்ட தொல்லைகள் தந்தார்களே! அவர்களெல்லாம் இனி பணிந்து வருவார்கள். வெளிநாட்டுப் பயணம் நல்ல விதத்தில் அமையும். வெளி வட்டாரத்தில் பதவிகள் கிடைக்கும். உங்களை ஆதரித்துப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போட்டிகளில் எளிதாக வெற்றி அடைவீர்கள். நீங்கள் ஒன்று சொன்னால் அதை மற்றவர்கள் வேறுவிதமாக எடுத்துக் கொண்டு உங்களை தவறாக புரிந்துக் கொண்ட அந்த நிலையெல்லாம் மாறும். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல்,சமயோசித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள்.

மாணவ, மாணவிகள் விளையாட்டுத் தனமாக செயல்பட்டார்களே, இனி உங்களின் நெடுநாள் கனவுகள் நனவாக உற்சாகத்துடன் படிப்பீர்கள். மந்தம், மறதி விலகும். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகளை அதிரடியாக வசூலிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த தொடர் யுத்தமெல்லாம் மாறும். அரசால் இருந்த நெருக்கடி நீங்கும். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் வரும்.

உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு,சம்பள் உயர்வு எல்லாம் இனி உங்கள் இடத்தைத் தேடி வரும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புது சலுகைகள் கிடைக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அயல்நாட்டு வாய்ப்புகளும் வரும்.

கலைஞர்களே! உங்களின் கற்பனைத்திறன் அதிகரிக்கும். கிசு கிசுத் தொல்லைகள், அவமானங்கள் நீங்கி பாராட்டுகள், பண முடிப்புகள் குவியும்.
இந்த குரு மாற்றம் பணம், பதவி, புகழ் என பலவற்றையும் தருவதுடன் சாதனைமேல் சாதனையும் புரிய வைக்கும்.

பரிகாரம்: திருஞானசம்பந்தரால் தேவாரத்தில் பாடல் பெற்ற ஸ்தலமான சென்னை திருவலிதாயத்தில் (பாடி) எழுந்தருளியிருக்கும் குரு பகவானை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் சென்று வணங்குங்கள். கருணை இல்லத்தில் பயிலும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். வெற்றி கிட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்