ஸ்ரீசனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (15:18 IST)
நிகழும் சர்வஜித்து வருடம், ஆடி மாதம் 20 ஆம் நாள் (5.8.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதயநேரம் உட்பட நண்பகல் மணி 12.09-க்கு, பஞ்சபட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார். 5.8.2007 முதல் 25.9.2009 முடிய உள்ள காலம் முழுவதும் சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கொண்டு தனது சீரிய கதிர்களைச் செலுத்துவார்.

5.8.2007 முதல் 5.8.2008 முடிய மகம் நட்சத்திரத்திலும்
16.8.2008 முதல் 29.8.2009 முடிய பூரம் நட்சத்திரத்திலும்
30.8.2009 முதல் 25.9.2009 முடிய உத்திரம் நட்சத்திரத்திலும் சனி பகவான் உலா வருகிறார்.
25.12.2007 முதல் 18.3.2008 முடிய மற்றும்
9.1.2009 முதல் 19.5.2008 முடிய உள்ள காலகட்டங்களில் சனி பகவான் வக்ர கதியில் செல்கிறார்.

உலகெங்கும் அதிரடி மாற்றங்களை இந்தச் சிம்மச் சனி ஏற்படுத்துவார். தொலை தொடர்புத் துறை அசுர வளர்ச்சியடையும்.கிராம மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும்.அவர்களின் அடிப்படை வசதிகளும் பெருகும்.பழமையான வைத்திய முறையை மக்கள் அதிகம் பின்பற்றுவார்கள். புதிய கோள்கள், நட்சத்திரங்கள் கண்டறியப் படும். நவகிரகங்களில் சூரியனின் உட்கருவின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்தியாவின் அண்டை நாடுகள் வலுவிலக்கும். உலகெங்கும் வாழும் இந்தியர்களின் தனித்திறமைகள் அதிகரிக்கும்.பெரிய பதவிகளில் அமர்வார்கள். மறைமுக மதப்போர் மூளும். நீரிழிவு நோய்,பால்வினை நோய்,புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஏழை, எளிய மக்கள் எங்கும் வலுவடைவார்கள். பணம் படைத்தவர்கள் தங்களது சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிகம் போராட வேண்டி வரும். அகிம்சை வழியில் செல்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கூடும். அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுவார்கள். போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் அதிகரிக்கும். நாட்டை ஆள்பவர்கள் கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். பல பிரபலங்களின் அந்தரங்கம் வெளிப்படும். முறையற்ற புணர்ச்சிகள் அதிகரிக்கும். பலர் வக்ர புத்தியுடன் செயல்படுவார்கள்.

சாதி,இனக் கலவரங்கள் புது வடிவில் உருவாகும். காவல்துறை, இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். இந்திய எல்லையில் போர் அபாயம் உண்டாகும். அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தவர்கள் இணைவார்கள். தலைமை மாறும். பல அதிசயங்கள் அரசியலில் நடக்கும்.அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை நிலவும். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியில் ஆளுபவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.சிலரை திருப்திப்படுத்த புதிய பதிவிகள் உருவாக்கப் படும்.புது மாநிலங்கள் உருவாகும்.

அயல்நாட்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்யும்.உலகின் தட்ப வெப்பநிலை மாறும். சூரியனின் அக்னி வீட்டில் சனி அமர்வதால், பூமியின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கும். மாவட்ட பருவ மாற்றங்களால் இயல்பான உணவு உற்பத்தி பாதிக்கும். காடுகள் தீப்பற்றி எரியும். மரப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். கடல் சீற்றம், சுனாமி பயம் விலகும். ஆனால் நில நடுக்கம், மலைச்சரிவு, இவற்றால் பாதிப்புகள் அதிகரிக்கும். மந்த வாயுக்களாலும், தொழிற்சாலைக் கழிவுகளாலும், மேலும் சுற்றுப்புறச் சுகாதாரம் கெடும்.

வழிபாட்டு ஸ்தலங்கள் வளர்ச்சியடையும்.ஆன்மிகவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும். போலிச் சாமியார்கள் பிடிபடுவார்கள். சிறுபான்மை மக்களுக்கு அரசால் அதிக ஆதாயம் அடைவார்கள். சாதாரணப் பதவிக்குக்கூட போட்டிகள் அதிகரிக்கும். நீர்நிலைகள் மாசுபடும். அறியவகை உயிரினங்கள் அழியும். ஓரினச் சேர்க்கை திருமணங்கள் அதிகரிக்கும். விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை உயரும். புதுப் பால்வினை நோய் பரவும்.போதை மருந்துகள்,மதுபானங்களுக்கு மக்கள் அடிமையாவார்கள்.

படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மாணவ&மாணவிகளிடையே விழிப்புணர்வு உண்டாகும். பாடச் சுமை குறையும். தேர்வில் தேர்ச்சி அடைவோரின் சதவிகிதம் கூடும். மருத்துவர்களை, அறிவியல் அறிஞர்களை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த புதுச் சட்டம் வரும். ரியல் எஸ்டேட் விழும். புதுக் கட்டிடங்கள் கட்டுவது பாதிக்கும். சிமெண்ட், மண், செங்கல்லுக்கு மாற்றாக புதுப்பொருள் பயன்படுத்தும் முயற்சி வெற்றியடையும்.

தங்கம், வெள்ளி விலை கட்டுக்குள் இருக்கும். நகரங்கள் விரிவடையும். கம்ப்யூட்டர், ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை விழும். மின்சார சாதனங்களின் விலை உயரும். பூமியில் பெட்ரோல், டீசல், எரி வாயுக்கள் உள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்படும். அந்நியச் செலாவணி குறையும். டாலரின் மதிப்பு கொஞ்சம் கூடும். வளைகுடா நாட்டில் அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை உண்டாகும். ஈழப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

அடிக்கடி வேலை மாறுவோரின் எண்ணைக்கை அதிகரிக்கும்.தனியார் துறை நவீனமாகும். இந்தியா அபரிதமான வளர்ச்சி அடையும். ஆனால் அரசியல்வாதிகளின் ஊழலால் இந்தியப் பெருமை குறையும். பெண்களின் கை ஓங்கும். புதிய அணைக்கட்டுகள் கட்டப்படும். அதிநவீன செயற்கைக் கோள்களை இந்தியா ஏவும். இராணுவம் நவீனமாகும். மீனவர்களுக்கு புதுச்சலுகை கிடைக்கும். கூட்டுக்குடும்பங்கள் உடையும். பெரியோர்க்கு மரியாதை குறையும். தொன்மைமிகு இந்திய பாரம்பரிய, பண்பாட்டுக் கலைகளுக்கு அயல்நாட்டில் மதிப்பு கூடும்.

இந்தச் சிம்மச் சனியால் மக்களின் ஒழுக்க நெறிமுறைகள் மாறும். உலகெங்கும் வாழும் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.வாழ்க்கையை முழுமையாக உடனே அனுபவித்து விட வேண்டும் என்ற அவசரப் போக்கு உருவாகும்.

பரிகாரம்: இந்த சிம்மச் சனியால் உங்கள் இல்லத்தில் செல்வம் தழைத்து மகிழ்ச்சியுடன் மனநிறைவும் பொங்க, ஏழை, எளியோருக்கு தானம் செய்யுங்கள். சமாதானமாகச் செல்லுங்கள். அக்கம் பக்கத்து வீட்டாரை அனுசரியுங்கள். உறவினர்களை, உடன் பிறந்தவர்களை, ஊனமுற்றவர்களை, உடல் நலம், மனநலம் பாதித்தவர்களை அன்பாக அணுகுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்