சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - தனுசு

இனிமையாக பேசும் குணமும், எல்லோருக்கும் உதவும் மனசும், விட்டுக்கொடுத்துப்போகும் பெருந்தன்மையும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களுக்கு பல இன்னல்களை கொடுத்துவந்த சனிபகவான் 5.8.2007 முதல் 25.9.2009 முடிய 9ம் வீட்டில் அமர்ந்து இனி பல நல்ல செயல்களைச் செய்வார். முன் கோபம் நீங்கும். குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துப் போவீர்கள். உங்கள் வார்த்தையை அனைவரும் மதிப்பார்கள்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். மகளுக்கு திருமணமும் நல்ல இடத்தில் முடியும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். கை நிறையச் சம்பாதிப்பார். குல தெய்வக் கோவிலுக்கு சென்று வருவீர்கள். வி.ஐ.பி.கள் இனி உதவுவார்கள். முன்கோபத்தால் அனைவரையும் பகைத்துக் கொண்டீர்களே, இனி இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையையும் மாற்றிக் கொள்வீர்கள். நீண்ட கால எண்ணமான வீடு வாங்கும் முயற்சி இப்பொழுது பூர்த்தியாகும்.

பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள், மனக் கசப்புகள் நீங்கும். கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, உடல் வலி நீங்கும். கனவுத் தொல்லை விலகும்.நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் அவதூறாகப் பேசினார்களே! இனி வலிய வந்து பேசுவார்கள். வெளிநாட்டுப் பயணம் நல்ல விதத்தில் அமையும். மாணவ, மாணவிகளே! கெட்டவர்களுடன் சேர்ந்து பாதை மாறிப் போனீர்களே! இனி நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மந்தம், மறதி விலகும்.

வியாபாரத்தில் இதுவரையில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவிகள், சலுகைகள் எல்லாம் உயரும். வருமானம் கூடும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களே! கிசு கிசுத் தொல்லைகள், அவமானங்கள் நீங்கி பாராட்டுகள், பண முடிப்புகள் குவியும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி தடைகள், பணமுடக்கம், சோர்வுகளிலிருந்து விடுபட வைப்பதுடன் சந்தோஷ்த்தையும், நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம் : திருச்செந்தூர் முருகப்பெருமானை சென்று வணங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஏமாற்றங்கள் நீங்கி எதிலும் வெற்றியுண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்