எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ராசிக்காரர்

செவ்வாய், 31 மே 2011 (20:09 IST)
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ராசிக்காரர் யார்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ராசி கன்னி ராசிதான். இவர்கள்தான் கலகலப்பாக எல்லோரிடமும் பேசுவார்கள். அதிலும் அஷ்டம நட்சத்திரக்காரர்கள் எல்லாரிடமும் போய் பேசுவார்கள். ஏற்கனவே பழகியவர் போன்றும், நெருக்கமாக இருந்தவர்கள் போன்றும், ஏன் இப்படி சோர்வாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.

அடுத்து, புதனுடைய ராசி மிதுன ராசிக்காரர்கள். அதிலும் குறிப்பாக திருவாதிரை நட்சத்திரக்காரர்களைப் பார்த்தால், மிகவும் இறுக்கமாக இருப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடுவார்கள். வாய் ஜாலம் அதிகம் இவர்களுக்கு. அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள். அதையெல்லாம் விடுங்கள், இதெல்லாம் ஒரு விடயமே இல்லை என்று பேசி அவர்களை அந்த சோகத்திலிருந்து விடுவித்துவிடுவார்கள். இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தை சிவனுடைய நட்சத்திரம் என்று சொல்வார்கள். மிதுனம், கன்னி, புதன் ராசி - புதன்தான் நட்புக்குரிய, பரந்துபட்ட நட்பிற்குரிய கிரகம் - அதாவது நெருங்கிய உறவுகள், ரத்த சம்பந்தங்கள் எல்லாம் இவர்களுக்குச் சுமாராகத்தான் இருக்கும். திடீரென்று அறிமுகமாகிறவர்கள்தான் கடைசி வரைக்கும் நட்பாகவும், துணையாகவும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் இந்த இரண்டு ராசிக்கார்களும் பொதுவாக எங்கு பார்த்தாலும் அனைவராலும் விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த மாதிரியான குணங்கள் இவர்களுக்கு உண்டு. தவிர, பார்த்த உடனேயே, பழகிய உடனேயே ஒரு ஈடுபாட்டுடன் இருப்பார்கள். கேட்பதற்கு முன்பாகவே சில ஆலோசனைகளை வழங்குவார்கள். ஆலோசனைகளை பகிர்ந்துகொள்வார்கள். இதனை மற்ற ராசிக்காரர்கள் உடனேயே பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இரண்டு நாள் கழித்து சொல்லலாம் என்று இருப்பார்கள். ஆனால், இவர்கள் பழகிய இரண்டு நிமிடத்திலேயே பகிர்ந்துகொள்வார்கள். அதனால், முதலில் கன்னி, பிறகு மிதுன ராசிக்கார்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும், ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்