கண்டத்திலிருந்து மீள முடியுமா?

வெள்ளி, 29 ஏப்ரல் 2011 (20:19 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: அகால மரணம் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். சமீபத்தில் பாடகி சித்ராவினுடைய மகள் நீரில் மூழ்கி இறந்துபோன சோகமான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வையெல்லாம் தடுக்கக்கூடிய துபாய் போன்ற இடங்களில் போய் இதுபோன்ற அகால மரணம் நிகழ்ந்துள்ளதை ஜோதிட ரீதியாக எப்படிப் பார்க்கிறீர்கள். இதுபோன்ற விடயங்களை எப்படி தவிர்ப்பது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஜாதகம் பார்க்க வரும்போதே சிலரிடம் சில காலகட்டம் வரை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். சமீபத்தில் ஒருவர் வந்திருந்தார். அவருடைய மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்ப வேண்டாம், நீங்களே கூட்டிக்கொண்டு போய் விடுங்கள், இல்லையென்றால், பள்ளிப் பேருந்து, வேனில் அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். ஏனென்றால், பெற்றோர்களுடைய கிரக அமைப்பை ஆராய்ந்து அவர்களுக்கு ஆலோசனையை கொடுத்துவிடுகிறோம்.

விசேஷம், கல்யாணம் போன்றவற்றிற்கு செல்லும்போது, குழந்தைகளுடன் இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னால் விட்டுவிட்டு வரவேண்டாம் என்றெல்லாம் கூட சொல்லி அனுப்புகிறோம். கண்டம் இருக்கிறது பையனுக்கு, அதற்காக பயப்படவேண்டாம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன். அதை கவனமாக கடைபிடியுங்கள் என்று சொல்லிவிடுவேன். எந்த விசேஷத்திற்குப் போனாலும், உங்களுடனேயே அழைத்துச் செல்லுங்கள், உங்களுடைய அழைத்து வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறோம்.

ஆனால் ஊழ்வினை என்று பார்க்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கெல்லாம் ஆயுளே குறைவு என்றெல்லாம் தெரியும். குறை ஆயுள்தான், ஆயுள்காரகன் சனி சரியாக இல்லை, 8ஆம் அதிபதி ஆயுள் ஸ்தான அதிபதி சரியில்லை என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பார்க்கும் போது, நீரால் கண்டம், நெருப்பால் கண்டம், மருந்தால் கண்டம் என்று தனித்தனியாக உண்டு. சங்க காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ர நாடி, நந்தி வாக்கியம், ஜாதக லங்காதம், கேரள மணிகண்ட ஜோதிடம் போன்ற நூல்களிலெல்லாம் எந்தெந்த கிரக அமைப்புகள் இருந்தால் ஆயுள் கெடுதல் உண்டாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோல, அந்தப் பெண் குழந்தையின் ஜாதகத்திலும் நீரால் கண்டம் என்பதெல்லாம் இருந்திருக்கும். அதிலும், எந்த மண்ணில் எங்கு போய் இறப்பு வரும் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அந்நிய தேசத்திற்கு சென்று இறப்பு ஏற்படும், பயணத்தின் போது மரணம், உண்ணும் போது மரணம், உறக்கத்தின் போது மரணம் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் லக்னாபதி, 8க்குரியவன், 6க்குரியவன் அந்த கிரக அமைப்புகளை வைத்தும் ஜாதகத்தை அலசிப் பார்க்கலாம்.

இதுபோல அந்தப் பெண்ணுடைய ஜாதகத்திலும் இருந்திருக்கும். அதேபோல, பெற்றோர்களின் ஜாதகத்தில் புத்திர சோகம் இருந்தாலும், அது பிள்ளைகளை பாதிக்கும். 5ஆம் இடத்தில் பாவ கிரகம் இருந்து, 5க்கு உரிய கிரகமும் பாவ கிரகங்களுடன் சேர்ந்து அந்த திசை நடக்கும் போது அந்தப் பெற்றோர்களுக்கு புத்திர சோகம் உண்டாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா என்கின்ற பெரிய பில்டர். ஒரு பெரிய கட்சியில் அவருடைய அப்பா பெரிய பொறுப்பில் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பு பையனுக்கு சீட் கேட்கலாம் என்று இருக்கிறேன் என்று வந்தார். தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நேரம் சரியாக இல்லை, சீட் எல்லாம் வேண்டாம். அவர் எங்கும் செல்ல வேண்டாம், ஓய்வு எடுக்கச் சொல்லுங்கள். ஏனென்றால், தகப்பனாராகிய உங்களுக்கு கர்ம திசை நடந்து கொண்டிருக்கிறது. பையனுடைய ஜாகத்தை பார்க்கும் போது விபத்துகள் நடக்கக்கூடிய காலகட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சாரத்திற்குக் கூட அவரை கூப்பிடாதீர்கள் என்று சொன்னேன். உடனே அவருடைய மனைவி, பார்த்தீர்களா இதற்குத்தான் நாம் ஜோதிடம் கேட்க வரவேண்டாம் என்று சொன்னேன். பாருங்கள், என்ன சொல்கிறார், கிளப்புங்க போகலாம் என்று கிளம்பிவிட்டார்கள். வரவேற்பறையில் சென்று, அவருக்கு இன்னமும் அனுபவம் போதவில்லை. ஒழுங்காக படித்துவிட்டு பார்க்கச் சொல் என்று திட்டிவிட்டு போய்விட்டார்கள்.

ஆனால், சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டார். டூவீலரில் வந்துக் கொண்டிருந்த போது திடீர் விபத்தில் இறந்துவிட்டார். நானும் போனேன். கதறினார். ஜோதிடம் பலித்துவிட்டதே, நீங்கள் சொன்ன பிறகும் திட்டிவிட்டு வந்தேனே. இவ்வளவு பெரிதாக ஆகும் என்று எதிர்பார்க்கவில்லையே என்றார். நாம் சொன்ன பிறகும், அவர் கோபப்பட்டு வெளியே செல்கிறார். அதற்கு நாம் என்ன செய்ய முடியும். சிலரெல்லாம் இதுபோன்ற எதிர்மறையாக திட்டிவிட்டுப் போகிறவர்கள் எல்லாம் உண்டு.

கண்டம் போன்றவற்றை ஓரளவிற்கு நம்மால் கண்டுபிடிக்க முடியும். இதில் ஒரு சிலருக்கு அதிலிருந்து வெளியில் வருவதற்கான சக்தி கிடைக்கும். சிலர் சொன்ன பிறகும் அதில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துவிடுவார்கள். பிறகு அதை அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்