ஆன்மிகவாதிகளின் வேஷத்தில் உள்ள போலி சாமியார்கள் பிடிபடுவது தொடருமா?

திங்கள், 29 மார்ச் 2010 (16:23 IST)
இந்தியா முழுவதிலும் பிரபல ஆன்மிக குருக்களாகக் கருதப்பட்ட நித்யானந்தா, கல்கி ஆகியோர் சமீபத்தில் சிக்கினர். அவர்களின் காவிச்சாயமும் வெளுத்தது. இந்த நிலை தொடருமா? மேலும் பல போலி ஆன்மிகவாதிகளின் சாயம் வெளுக்குமா?

பதில்: ஆன்மிகத்திற்கு உரிய கிரகமாக குரு கருதப்படுகிறது. தற்போது குரு நீச்சம் அடைந்துள்ளதால் (கும்பத்தில்) போலி ஆன்மிகவாதிகள் பிடிபடும் நிலை தொடரும். கும்பம் சனியின் வீடாகும்.

வரும் மே 2ஆம் தேதி மீனத்திற்கு குரு பகவான் அதிசாரத்தில் பெயர்ச்சியாகிறார். குரு தனது சொந்த வீட்டிற்கு சென்றாலும், கன்னியில் உள்ள சனியின் நேரடிப் பார்வையில் இருப்பதால், போலி சாமியார்களுக்கு இது போதாத காலமாகவே இருக்கும். ஏனென்றால் போலிகளை உலகிற்கு உணர்த்துவதே சனியின் கடமை.

வரும் 2011 மே மாதம் வரை போலிச் சாமியார்கள் பிடிபடுவது தொடரும். ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள போலிச் சாமியர்கள் மட்டுமின்றி மத வேறுபாடின்றி இந்த நிகழ்வு தொடரும். (சமீபத்தில் கேரளாவில் உள்ள போலி மதபோதகர் பிடிபட்டார்). எனவே, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பலரின் முகத்திரை கிழியும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜகிரகங்கள் என்றழைக்கப்படும் குருவும், சனியும் ஆன்மிகம் தழைத்தோங்கச் செய்யும் கிரகங்களாக கருதப்படுகின்றன. இதில், யோகம், நிஷ்டை, தியானம் ஆகியவற்றில் ஒருவரை ஈடுபடச் செய்வது சனி பகவான். ஒருவரது ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவரால் புலன்களை அடக்கியாள முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்