ஜனவரி 15இல் நடக்கும் கங்கண கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

புதன், 13 ஜனவரி 2010 (17:19 IST)
மனிதர்களின் கை மணிக்கட்டில் இருக்கும் ரேகைக்குப் பெயர் கங்கண ரேகை. இது வளைவாக இருக்கும். கங்கணம் என்றால் ‘வளையம’ என்று அர்த்தம். ஒருவருக்கு கங்கண ரேகை வலுவாக இருந்தால், அவர் மனஉறுதி படைத்தவராக இருப்பார் என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.

முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் முழுமையாக மறையும். ஆனால் கங்கண சூரிய கிரகணத்தின் போது சூரியன் சுற்றி ஒளி வளையம் உருவாகும். பொதுவாக முழு சூரிய கிரகணத்தை விட கங்கண சூரிய கிரகணத்திற்கே வலிமை அதிகம். சூரியனின் ஆற்றல், வெப்பத்தை கங்கண கிரகம் கடுமையாக பாதிக்கும். இதனால் பூமியிலும் சில மாற்றங்கள் ஏற்படும்.

பொதுவாக கங்கண கிரகணம் ஏற்பட்டால் அது ஆட்சியாளர்களுக்கு ஆகாது என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியாளரின் உறவுகள், குடும்பத்தில் விரிசல் ஏற்படும். எந்தப் பகுதியில் கங்கண கிரகணம் முழுமையாகத் தெரிகிறதோ அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும் பாதிப்பு உண்டாகும்.

அதன்படி ஜனவரி 15ஆம் தேதி நடக்கும் கங்கண சூரிய கிரகணத்தால் கும்பகோணம், மாயவரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். இயற்கை சீற்றம், கடல் கொந்தளிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

இந்த கங்கண கிரகணத்தால் நாட்டில் பயங்கரவாத அமைப்புகள் வலுவடையும். குறுக்குபுத்தி உறையவர்களின் கை ஓங்கும். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே, எந்தெந்த மாநிலங்களில் கங்கண கிரகணம் தெரிகிறதோ அந்தந்த மாநில ஆட்சியாளர்கள் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும்.

எந்த கிரகணமாக இருந்தாலும், அது முடிந்தவுடன் புனித நதிகளில் நீராடுவது நல்லது. மற்றபடி பெரியளவில் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாது. எனினும், கிரகணம் எந்த நட்சத்திரத்தில் நிகழ்கின்றதோ அந்த நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதன்படி, ஜனவரி 15இல் நிகழும் கங்கண சூரிய கிரகணம், உத்திராடம் நட்சத்திரத்தில் வருவதால் அந்த நட்சத்திரக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் கிருத்திகை, உத்திரம், பூராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்