அனுஷம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், மேஷ ராசியில் பிறந்தவர்களும் அமைதியான சுபாவம் உடையவர்களா?

புதன், 25 நவம்பர் 2009 (18:43 IST)
செவ்வாய் ராசியில், சனி பகவானின் நட்சத்திரமாக அனுஷம் கருதப்படுகிறது. அனுஷம் நட்சத்திரக்காரர்கள் நேருக்கு நேர் பேசக்கூடியவர்கள். கண்டிப்பானவர்கள். யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு மட்டுமே ஆதரவு தெரிவிப்பார்கள். இவர்களைத் ‘தன்மானச் சிங்கங்கள’ என்று கூறலாம்.

இவருடன் (அனுஷம்) பழகுபவர் எந்த விதத்தில் பழகுகிறாரோ அதற்கு ஏற்றவாறு பழகுவார்கள் அல்லது விலகுவார்கள். விட்டுக் கொடுத்தல் என்பதை இவரிடம் எதிர்பார்க்க முடியாது. ஒத்துவந்தால் பேசுவார்கள்; இல்லாவிட்டால் ஒதுங்கிக் கொள்வார்கள்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் அனைவருடனும் நன்றாகப் பேசிப் பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு எல்லைக்குள்ளேயே அவர்களின் நட்பு இருக்கும். அனுஷத்துடன் ஒப்பிடும் போது சுவாதி நட்சத்திரக்காரர்கள் அனுசரித்து செல்வார்கள் என்று கூறலாம்.

மேஷ ராசியில் பிறந்தவர்கள் அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய 3 நட்சத்திரங்களுக்குள் வருகிறார்கள். இதில் பரணி நட்சத்திரக்காரர்கள் ஓரளவு அனுசரித்துச் செல்வார்கள். அஸ்வினி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்புடன் இருப்பார்கள்.

ஒருவரின் நட்சத்திரத்தை மட்டும் வைத்து அமைதியான குணம் உடையவர்கள், அனுசரித்துச் செல்வார்கள் என்று ஜோதிட ரீதியாகக் கூறிவிட முடியாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு, தசாபுக்தி உள்ளிட்டவற்றை வைத்தே ஒருவரின் சுபாவத்தை கூற முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்