நிலவின் மீது நாசா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது பற்றி?

நிலவின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் ராக்கெட்டை மோதச் செய்த நாசா விஞ்ஞானிகள், அதன் தாக்கத்தால் உருவான பள்ளத்தில் ஆய்வுக் கலத்தை செலுத்தி தண்ணீர் இருக்கிறதா என ஆய்வு செய்துள்ளனர். இதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நவகிரகங்களில் ஒன்றான சந்திரனின் (நிலவு) மீது செயற்கையான ஒரு தாக்குதலை நாசா நடத்தியுள்ளதாக ஒரு சில ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாசாவின் ஆய்வு காரணமாக சந்திரனின் இயல்புநிலை மாறுமா? இதனால் பூமியில் உள்ள மனிதர்களுக்கு ஜோதிட ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

பதில்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குருவின் மீது சூமேக்கர் (Shoemaker) என்ற விண்கல் மோதியது. அதன் காரணமாக குரு கிரகத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த தருணத்தில் பல பைனான்ஸ் கம்பெனிகள் மூடப்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

குரு கிரகத்தின் மீது சூமேக்கர் மோதியது இயற்கையான நிகழ்வு என்றாலும் அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது.

நாசா தற்போது நிலவின் மீது மோதச் செய்த ராக்கெட், சூமேக்கர் விண்கல்லை விட பன்மடங்கு சிறியது. அதனால், அந்த ராக்கெட் ஏற்படுத்தும் தாக்கமும் மிகக் குறைவானதே.

எனவே, நாசாவின் இந்த செயற்கைத் தாக்குதல் காரணமாக சந்திரனின் இயல்பு நிலை மாறி விடாது. எனினும், ஜோதிட ரீதியாக சந்திரன் மனோகாரகன் என்பதால் உலகில் உள்ள ஜீவராசிகளின் மனநிலை சிறியளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களில் மனிதன் விரைவில் குடிபெயர்வதற்கான சாத்தியங்கள் உள்ளது. ஜோதிட ரீதியாக சந்திரன் ஜல கிரகம் என்றே அழைக்கப்படுகிறது. அங்கு ஏராளமான அளவில் தண்ணீர் இருப்பது உண்மை.

தற்போது நிலவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அதன் ஒரு பகுதியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதனால் நிலவில் தண்ணீர் இல்லை என்று ஒரு தரப்பினரும், தண்ணீர் உண்டு என்று மற்றொரு தரப்பினரும் வாதிடுகின்றனர். எனினும் நிலவில் தண்ணீர் இருப்பது விரைவில் உறுதி செய்யப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்