தீபாவளியை எப்போது கொண்டாடலாம்?

வியாழன், 8 அக்டோபர் 2009 (17:10 IST)
300 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புரட்டாசியில் தீபாவளி வந்துள்ளது? இதனால் என்ன மாற்றங்கள்/விளைவுகள் ஏற்படும்?

மத கோட்பாடுகளின் அடிப்படையில் பார்க்கும் போது புரட்டாசி மாதத்தில் தீபாவளி வருவதால் வைணவம் வளரும். தங்களின் மதத்தை வளர்ச்சி பெறச் செய்வதில் சம்பந்தப்பட்ட மதப் பிரமுகர்கள் ஆர்வமுடன் செயல்படுவர்.

இதன் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பான்மையான மதத்திற்கு சற்றே பின்னடைவு ஏற்படும். சிறுபான்மை மதம் முன்னேறும். ஜோதிடத்தைப் பொறுத்தவரை புரட்டாசி என்பது கன்னி மாதம். ஐப்பசி என்பது துலாம் மாதம்.

தற்போது கன்னி மாதத்தில் தீபாவளி வருவதால், கல்வியாளர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்படும். புதனின் வீடான கன்னி மாதத்தில் 2 அமாவாசை வருவதே இதற்கு காரணம். இதுமட்டுமின்றி இயற்றை சீற்றங்கள், அழிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

தீபாவளியை எப்போது கொண்டாடலாம்?

இந்தாண்டு (அக்டோபர் 17ஆம் தேதி) சதுர்த்தசி திதி இருக்கும் போதே தீபாவளி வந்து விடுகிறது. அக்டோபர் 16ஆம் தேதி இரவு துவங்கும் சதுர்த்தசி திதி, 17ஆம் தேதி நண்பகல் வரை நீடிக்கிறது. அதன் பிறகு அமாவாசை. எனவே, சனிக்கிழமை காலை முதலே தீபாவளியைக் கொண்டாடலாம்.

அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டுமா?

நரகாசுரனை அழித்த தினமே தீபாவளி என தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது. எனவே, தீயவற்றை அழித்து, நல்லவற்றை எடுத்துக் கொள்வதே தீபாவளி தினத்தின் உள்நோக்கம். வட இந்தியாவில் லட்சுமி குபேர பூஜையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிடலாமா என்பது பற்றி எதுவும் பழங்கால நூல்களில் குறிப்பிடப்படவில்லை. புனித நதிகளில் நீராட வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளன.
எனவே, அசைவ உணவுகளை தவிர்ப்பதும், சாப்பிடுவதும் அவரவர் மன, உடல்நிலையைப் பொறுத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்