லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்து உச்ச பலம் பெற்றால் 2 மனைவி யோகம் ஏற்படுமா?

வாசகர் கேள்வி: லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்து உச்ச பலம் பெற்றால் 2 மனைவி யோகம் ஏற்படுமா? உதாரணமாக மேஷ லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து 7ஆம் பார்வையாக களத்திர ஸ்தானத்தைப் பார்த்தால் என்ன பலன்?

பதில்: ஜோதிடத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னங்கள், சர லக்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக சர லக்னங்களுக்கு களத்திர தோஷம் உண்டு என பண்டைய ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த தோஷத்திற்கு, ‘உபய களத்திரம’ என்ற வார்த்தையும் அந்த நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜோதிட விதிப்படி லக்னாதிபதி எந்த இடத்தைப் பார்த்தாலும் அது நல்ல பலனைத் தரும். ஆனால் சனி, செவ்வாய் லக்னாதிபதியாக வரும் போது அதனுடைய பார்வை சில கெடு பலன்களைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த வாசகருக்கு செவ்வாய் லக்னாதிபதியாக வருகிறார்.

ஆனால், இந்த வாசகர் கேட்டது போல், மேஷ லக்னத்தில் செவ்வாய் (லக்னாதிபதி) அமர்ந்து, களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் மட்டும் 2 தார யோகம் உண்டு என்று கூறிவிட முடியாது. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் அவருக்கு ஒரே மனைவி அமையும்; அவர் ஒழுக்க சீலராக இருப்பார். இதுவே செவ்வாய் (லக்னாதிபதி) பரணி நட்சத்திரத்தில் இருந்தால் பலன்கள் அதிகம் கிடைக்கும்.

அதே நேரத்தில் மேஷ லக்னத்தில் பிறந்த சிலருக்கு கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் செவ்வாய் அமர்ந்திருந்து, சப்தமாதிபதி சுக்கிரன் மறைந்து கெட்டுப் போய் இருந்தால் அவருக்கு 2வது தாரம் அமையும்.

லக்னாதிபதி (செவ்வாய்) ஆட்சி பெற்று, 7ஆம் அதிபதி நன்றாக இருந்தால் அவருக்கு ஒரு மனைவி மட்டுமே. ஆனால் லக்னாதிபதி கெட்டு, 7ஆம் அதிபதியும் கெட்டுப் போய் இருந்தால் அவருக்கு 2 மனைவிகள் அல்ல பல மனைவிகள் அமைந்தாலும் வாழ்க்கையில் திருப்தி இருக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்