ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒரே நேரத்தில் உயிரிழப்பது ஏன்?

வியாழன், 9 ஜூலை 2009 (18:33 IST)
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, மகள், பேத்தி மூவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்ததாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஒரே குடும்பத்தில் உள்ள பலர் ஒரே சமயத்தில் உயிரிழப்பது எதைக் குறிக்கிறது?

பதில்: இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களின் ஜாதக அமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. நடிகை லட்சுமி நடத்திய ‘கதையல்ல நிஜம’ நிகழ்ச்சியில் ஒரே பாம்பு கடித்ததால் பல குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களைப் பற்றிய விவாதத்தில், ஜோதிட விளக்கம் கேட்க என்னை அணுகினார்கள்.

அந்த நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் உயிருடன் உள்ளவர்களிடம் நடிகை லட்சுமி நேர்காணல் நடத்தினார். அப்போது இறந்தவர்களின் ஜாதகம் வேண்டும் என்று அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டேன். ஆனால் தங்களிடம் அவை இல்லை எனக் கூறினர்.

இதையடுத்து இறந்தவர்களின் பிறந்த தேதி, நேரத்தை வைத்து அவர்களின் ஜாதக அமைப்பைக் கணக்கிட்டேன். அதில் ஆச்சரியப்படும் உண்மைகள் தெரியவந்தது. ஒரேவீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். முதலில் இருப்பவருக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்து இருப்பவருக்கு சுக்கிர தசை. 3வது நபருக்கு சனி தசையில் ராகு புக்தி. 4வது நபருக்கு புதன் தசையில் சுக்கிர புக்தி. 5வது நபருக்கு கேது தசை நடக்கிறது.

இதில் முதலில் படுத்திருந்தவர் மற்றும் 3வது, 5வது நபர்களை மட்டும் பாம்பு தீண்டியது. 2வது, 4வது நபர்களை பாம்பு கடிக்கவில்லை. இதனை ஜோதிட ரீதியாக நான் உணர்த்திய போது நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதேபோல் ஒரு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கும் ஜோதிட ரீதியாக தொடர்பு உள்ளது.

உதாரணமாக ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் பலருக்கு ராகு தசை நடக்கும் நிலை ஜோதிட ரீதியாகக் காணப்பட்டால் அவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் புதிய இடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை பத்திரமாக மூடி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்லி உள்ளிட்டவை உணவுப் பாத்திரத்தில் விழுந்து விடலாம். இதுபோன்ற பல்வேறு அறிவுரை, வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்குகிறோம்.

தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, மகள், பேத்தி என 3 பெண்களும் ஒரே இரவில் பாம்பு கடித்து உயிரிழந்ததற்கும் ஜோதிட ரீதியான தொடர்பு உண்டு. அவர்களின் ஜாதகத்தை கணித்தால் இதுபற்றி விரிவாகக் கூற முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்