ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் மாற்றமே இல்லை. அவரது லக்னம்-சிம்மம், ராசி-மகரம், நட்சத்திரம்-திருவோணம். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்ற ஒரு ஜோதிட பாடல் உண்டு. திருவோணம் நட்சத்திரத்திற்கென்று தனி நிர்வாக திறமை இருக்கும்.
சிம்ம லக்னம் (சூரியனின் லக்னம்), ராசி மகரம் (சனியின் ராசி), நட்சத்திரம் திருவோணம் (சந்திரனின் நட்சத்திரம்). இதில் ரஜினியின் உயிர் நெருப்பு (சூரியன்), உடல் தண்ணீர் (சனி). நீரும், நெருப்பும் எப்போதுமே மோதிக் கொண்டே இருக்கும். சூரியனுக்கும், சனிக்கும் பகையுண்டு.
இதன் காரணமாகவே அவர் விஷயத்தில் ஒரு ஊசலாட்டம் காணப்படுகிறது. ஆனால் சிம்ம லக்னம் ஸ்திர லக்னம் என்பதால், அவரது மனதில் நிலையான எண்ணங்கள் இருக்கும். எனவே அவரைக் குழப்பவாதி என்று கருதத் தேவையில்லை.
ஆனாலும், தற்போது அவருக்கு நடக்கும் அஷ்டமச் சனி 27/09/2009 அன்று முடிவடைவதால், அதன் பின்னர் அவர் சிறிது சிறிதாக அரசியலுக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 2010இல் வெளிப்படையாக சில விஷயங்களை அவர் தெரிவிக்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
அவரது ஜாதகப்படி ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.
அரசியலில் கமலஹாசன் கால் பதிப்பாரா?
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள கமலின் ஜாதகம் முழுக்க முழுக்க கலைக்கு உரிய ஜாதகம். அரசியலுக்குரிய கிரகங்கள் வலுவிழந்து காணப்படுவதால் அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது.
கலைத்துறையில் கமல் அசாதாரண நிலைக்குச் செல்வார். யாராலும் சாதிக்க முடியாத விஷயங்களை கலைத்துறையில் அவர் சாதிப்பார். மேலும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து சாதிக்கும் வாய்ப்பும் அவருக்கு அதிகம் உள்ளது.
மக்களவைத் தேர்தலில் விஜயகாந்தின் பங்களிப்பு எப்படி இருக்கும்?
மக்களவைத் தேர்தலில் இவரது பங்கு சுமாராகவே இருக்கும். மேலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அதுபற்றி கணிப்பது ஏற்புடையது அல்ல என்றாலும், விஜயகாந்தின் ஜாதக அமைப்பை வைத்துப் பார்க்கும் போது தனித்து நின்றால் அவர் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால் அவருக்கு தற்போது புதன் தசை நடக்கிறது. ஜோதிடத்தில் புதன் என்பது கூட்டுக்கு உரிய கிரகம். பிற கிரகங்களுடன் கூடினால் புதன் வலிமை பெறும். ஜோதிட நூல்களில் கூட, புதன் எந்த கிரகத்துடன் இணைகிறதோ, அந்த கிரகத்தின் செயல்பாடு/தன்மையை அதிகரிக்கும். புதன் தனித்திருக்கும் பட்சத்தில் அது வலுவாக இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
அவர் கூட்டணி அமைக்காமல் இருந்தால் சரிவைச் சந்திப்பார். மேலும் இந்த மக்களவைத் தேர்தல் அவருக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும்.