அஷ்டமச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

வியாழன், 20 நவம்பர் 2008 (18:00 IST)
மகர ராசிக்கு அஷ்டமச் சனி தற்போது நடந்து கொண்டிருப்பதால், அந்த ராசிக்காரர்கள் திருமணத்தை தள்ளிப் போடுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறேன். மகர ராசியுடைய பெண்ணின் ஜாதகத்தை எடுத்து வந்த ஒரு பெற்றோர், பொருத்தம் பார்க்கும் படி கூறினர்.

திருமணத்தை ஒன்றரை ஆண்டு தள்ளிப்போடுமாறு கூறினேன். ஆனால் அவர்கள் தங்கள் பெண்ணிற்கு தற்போது 30 வயதைக் கடந்து விட்டதால் இனியும் தாமதிக்க முடியாது. உறவினர்கள் எங்களை மதிக்க மாட்டார்கள். எனவே விரைவில் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று கூறினார்கள்.

தற்போது அஷ்டமச் சனி நடப்பதால்தான் திருமணத்தை தள்ளிப்போடுமாறுக் கூறினேன். அதன் பிறகு உங்கள் இஷ்டம் என்று கூறியதும் அவர்கள் சென்றுவிட்டார்கள். ஒரு சில மாதங்களிலேயே அப்பெண்ணின் பெற்றொர் மீண்டும் வந்து என்னிடம் நடந்ததைக் கூறினர். அப்பெண்ணுக்கு திருமணம் நடந்த ஒரு சில மாதத்திலேயே அவள் அகால மரணமடைந்தாள் என்றும், ஆனால் எங்களின் திருமணமாகாத மற்ற 2 பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அதனை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்று கூறி கண்ணீர் விட்டனர்.

கோச்சார கிரகங்கள் மோசமாக இருக்கும் போது திருமணம் செய்யக் கூடாது. ஏனென்றால் அந்த சமயங்களில் உடலுறவுக்கு மனமும், உடலும் ஏற்புடையதாக இருக்காது. அஷ்டமத்துச் சனி, ஜென்ம சனி காலங்களிலும் காமத்திற்கு உடல் ஒத்துழைக்காது. அதுபோன்ற காலங்களில் தம்பதியர் இடையே சிறு மனக்கசப்புகள் ஏற்படும். இதனைக் காரணமாகக் கொண்டுதான் முன்பு பேசிய நபர்களிடம் மீண்டும் நட்பை புதுப்பித்துக் கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள அவர்கள் (ஆண்/பெண்) முற்படுவர்.

அதனால் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும். அதேபோல் திருமணத் தேதியை தேர்வு செய்யும் போது மணப்பெண்ணுக்கு தாரா பலம் உள்ள நாளில் திருமணத் தேதியை அமைக்க வேண்டும். மாதவிடாய் நாட்கள் குறுக்கிடவே கூடாது.
இதுபோன்ற காலங்களில் திருமணம் செய்வது துர்மரணத்தை கொடுக்கும். மேலும் மனைவிக்கு மாதவிடாய் உள்ள காலத்தில் கிரகப் பிரவேசம் செய்தால் அந்த வீடே உருப்படாது.

எனவே, ஜோதிடத்தின், திருமணப் பொருத்தத்தின் உள்விதிகளை அறிந்து, நடைமுறையில் பயன்படுத்தி ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் கொடுத்து பொருத்தம் பார்த்து, திருமணத் தேதியை குறித்து மணம் செய்தால் அந்த தம்பதியர் இறுதி வரை மகிழ்ச்சியுடன் வாழலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்