வளர்ந்த நகரங்களில் குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பின் வளாகத்திற்கு உள்ளேயே சிறிய கோயில்களை அமைக்கின்றனர். அவை பெரும்பாலும் விநாயகர் கோயில்களாகவே இருக்கிறது.
பொதுவாக கோயில்கள் ஆகம விதிப்படி அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இதுபோன்று அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைக்கப்பட்டால் அதனால் பக்தர்களுக்கு பலன் கிடைக்குமா? மேலும், வாஸ்து முறைப்படியின்றி இடவசதிக்கு தகுந்தவாறு இந்தக் கோயில்களை அமைப்பதால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழுமா?
webdunia photo
WD
மற்ற தெய்வங்களுக்கு ஆகம விதிப்படி இந்தந்த திசைகளில்தான் அமைக்க வேண்டும் என்று வரையறை இருந்தாலும், விநாயகர் கோயிலை இந்தத் திசையில்தான் அமைக்க வேண்டும் அல்லது இங்குதான் அமைக்க வேண்டும் என்று எந்த வரையறை ஏதும் இல்லை.
விநாயகர் என்பவர் சூட்சும வடிவத்தை கொண்டவர். அவரை பிரணவ மந்திரத்தின் வடிவம் என்றும் கூறுவர். அதனால்தான் மனித உடலில் விலங்கின் தலையுடன் விநாயகர் காட்சி தருகிறார். இதன் காரணமாகவே ஆகம விதிகள் விநாயகர் கோயில்களுக்கு தேவைப்படுவதில்லை.
வன் வினைகளை தீர்க்கக் கூடியவர் என்பதாலேயே அவர் வினை தீர்க்கும் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு திருஷ்டியையும் எடுக்கும் வல்லமை படைத்தவர். தெருக் குத்து, சந்து குத்து, மற்ற குத்துகள் எதுவாக இருந்தாலும் அதையும் தீர்க்கக் கூடிய வல்லமை அந்த உருவத்திற்கு (விநாயகருக்கு) உண்டு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அதனால் விநாயகர் கோயிலை குடியிருப்புகள் உள்நோக்கியும் வைத்துக் கொள்ளலாம், வெளிப்புறத்தை நோக்கியும் வைத்துக் கொள்ளலாம்.
எனவே, அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைக்கும் விநாயகர் கோயிலை எந்தத் திசையிலும் அமைத்துக் கொள்ளலாம். வாஸ்து பார்க்கத் தேவையில்லை.